தகானு அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரெயிலில் திடீர் தீ; 2 பெட்டிகள் எரிந்து நாசம் பயணிகள் ரெயில் சேவை பாதிப்பு
தகானு அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் பயணிகள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
வசாய்,
தகானு அருகே சரக்கு ரெயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு பெட்டிகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இதனால் பயணிகள் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது.
சரக்கு ரெயிலில் தீ
குஜராத் மாநிலம் வதோதராவில் இருந்து நேற்று முன்தினம் இரவு சரக்கு ரெயில் ஒன்று நவிமும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது. அந்த ரெயில் வேகன்களில் பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றப்பட்டு இருந்தன. இரவு 10.35 மணியளவில் பால்கர் மாவட்டம் தகானு அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அந்த சரக்கு ரெயிலில் தீப்பிடித்தது.
சரக்கு ரெயிலின் 15-வது பெட்டி தீப்பிடித்து எரிந்தது. சரக்கு ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால் காற்றின் காரணமாக தீ மளமளவென 16-வது பெட்டிக்கும் பரவியது.
பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் சரக்கு ரெயிலின் 2 பெட்டிகளும் கொழுந்து விட்டு எரிந்தன. மேலும் கரும்புகை அதிகளவில் வெளியேறியது.
தீயை அணைக்க போராட்டம்
இதை பார்த்து கார்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக என்ஜின் டிரைவருக்கு தெரியப்படுத்தினார். இதையடுத்து, உடனடியாக அந்த ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. அவர்கள் இதுகுறித்து தீயணைப்பு படையினர் மற்றும் ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள். இருப்பினும் உடனடியாக அவர்களால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
2 பெட்டிகள் நாசம்
வெகுநேர போராட்டத்துக்கு பிறகே தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் தீ விபத்தில் 2 சரக்கு பெட்டிகளில் இருந்த பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. மேலும் தீயின் வெப்பம் காரணமாக மேலே செல்லும் ஓவர்ஹெட் மின்கம்பி உருகி சேதம் அடைந்தது.
இந்த சம்பவத்தின் காரணமாக மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் நீண்ட தூர மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த வழியாக வந்து கொண்டிருந்த 10 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. தகானு - விரார் இடையிலான மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
இந்த நிலையில், தீப்பிடித்து எரிந்த சரக்கு ரெயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி, தீயால் சேதம் அடைந்த ஓவர்ஹெட் மின்கம்பி சரி செய்யும் பணி நடந்தன. இந்த பணிகள் நிறைவடைந்து நேற்று காலை 9.15 மணிக்கு பின்னர் மீண்டும் அந்த வழியாக ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
Related Tags :
Next Story