தர்மபுரி மாவட்டத்தில் கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசி சென்றிருக்கிறார் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி
தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசி சென்றிருக்கிறார் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தர்மபுரி,
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தில் பிரசாரம் செய்த கமல்ஹாசன் வாய்க்கு வந்ததை பேசி விட்டு சென்றிருக்கிறார். இந்த விவரங்களை அவருக்கு யார் எழுதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. பாலக்கோட்டில் பிரசாரம் மேற்கொண்ட கமல்ஹாசன் அந்த பகுதியில் 200 பேர் மர்மக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தவறான தகவலை கூறி உள்ளார். உண்மையில் தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 132 பேர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் ஐதராபாத்தில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வந்த ஒருவருக்கு மட்டும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் குணமடைந்து உள்ளார். மீதமுள்ள 131 பேருக்கு சாதாரண காய்ச்சல் இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. டெங்குகாய்ச்சல் தடுப்பு பணிகளை தமிழக அரசு தர்மபுரி மாவட்டத்தில் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
கமல்ஹாசன் கூறியுள்ளதை போல் நல்லம்பள்ளி பகுதியில் பள்ளிகள் குறைவாக இல்லை. நல்லம்பள்ளி, அதியமான்கோட்டை, பாளையம்புதூர், லளிகம் ஆகிய அருகருகே உள்ள ஊர்களில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. நல்லம்பள்ளி ஒன்றியத்தில் மட்டும் 14 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 20 அரசு உயர்நிலைப்பள்ளிகள், 2 அரசு உதவிபெறும் பள்ளிகள் செயல்படுகின்றன. வத்தல்மலையில் வசிக்கும் மாணவ-மாணவிகளின் வசதிக்காகவே அங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழக அரசு பள்ளிக்கல்வியையும், உயர்கல்வியையும் மேம்படுத்த எடுத்த சீரிய நடவடிக்கைகள் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் கல்லூரி கல்விக்கு செல்லும் மாணவ-மாணவிகளின் சதவீதம் 98.47 ஆக உயர்ந்துள்ளது. எனவே பள்ளிகள் குறைவாக உள்ளது என்று அவர் கூறுவதும் தவறானது. மதுக்கடைகளின் அளவை குறைக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பேட்டியின்போது அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
Related Tags :
Next Story