கறவை பசுக்கள் வழங்கும் திட்டம்: பயனாளிகள் தேர்வுக்கு சிறப்பு கிராமசபை கூட்டம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
எலச்சிபாளையம் ஒன்றியத்தில் இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை தேர்வு செய்ய சிறப்பு கிராமசபை கூட்டம் வருகிற 16 மற்றும் 23-ந் தேதிகளில் நடைபெற இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.
நாமக்கல்,
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் 4 கிராமங்களில் இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் (டிசம்பர்) எலச்சி பாளையம் ஒன்றியம் அகரம், கீழப்பாளையம் கிராமங்களிலும், அடுத்த ஆண்டு (2019) ஜனவரி மாதம் மோளிப்பள்ளி, போக்கம்பாளையம் கிராமங்களிலும் 200 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட உள்ளது.
இதற்கான பயனாளிகளை தேர்வு செய்ய முதல் சிறப்பு கிராமசபை கூட்டம் வருகிற 16-ந் தேதியும், 2-வது கிராமசபை கூட்டம் வருகிற 23-ந் தேதியும் நடத்தப்பட்டு, பயனாளிகள் தேர்வு இறுதி செய்யப்படும். கிராம ஊராட்சிகளில் கிராமசபை மூலம் தேர்வு செய்யப்படும், தகுதி உள்ள பயனாளிகளுக்கு இலவச கறவை பசுக்கள் கிடைக்கும்.
இத்திட்டத்தில் பயனடையும் நபர் ஏழ்மையிலும், ஏழ்மையான பெண்ணாக இருக்க வேண்டும், தற்சமயம் பசுக்கள் இல்லாதவராக இருக்க வேண்டும். ஏற்கனவே இலவச கறவை பசுக்கள் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. எனவே தகுதியான பெண்கள் சிறப்பு கிராமசபை கூட்டங்களில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் அடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story