வரத்து குறைந்தது பூக்கள் விலை கடும் உயர்வு மல்லி கிலோ ரூ.1,800-க்கு விற்பனை
வரத்து குறைந்ததால் கோவையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. மல்லி கை பூ கிலோ ரூ.1,800-க்கு விற்பனையானது.
கோவை,
கோவையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், திருக்கார்த்திகை உள்பட பண்டிகை காலங்களில் பொதுமக்கள் பூக்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். மேலும் கோவில் திருவிழாக்கள், சுபநிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கும் பூக்களையே அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
பூக்களின் தேவை அதிகளவு இருப்பதால் பண்டிகை காலம் மற்றும் சுபமுகூர்த்த காலங்களில் கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரிப்பது வழக்கம். தற்போது கோவையில் பனிப்பொழிவு அதிகளவு இருப்பதால் பூக்களின் வரத்து குறைந்தது. இதன்காரணமாக அதன் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் சங்க கமிட்டி உறுப்பினர் அருண்சங்கர் கூறியதாவது:-
கோவை பூ மார்க்கெட்டுக்கு நீலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. தற்போது கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக மல்லிகைப்பூ, ஜாதி மல்லி உள்ளிட்ட செடிகளில் உருவாகும் மொட்டுகள் கருகி விடுகின்றன. இதனால் பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டு, வரத்து குறைந்து உள்ளது.
மேலும் ஐப்பசி மாதத்தில் நிறைய சுபமுகூர்த்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்காக பூக்களின் தேவை அதிகமாக இருக்கும். இதனால் பூக்கள் விலை உயர்ந்து உள்ளது. கடந்த வாரம் தீபாவளி பண்டிகையையொட்டி கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.1000 விலை உயர்ந்து ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல் மற்ற பூக்களின் விலை விவரம் (கிலோவில்) வருமாறு:- (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) ஜாதிமல்லி ரூ.800 (ரூ.700), அரளி ரூ.120 (ரூ.100), சம்மங்கி ரூ.150 (ரூ.100), முல்லை பூ ரூ.1,200 (ரூ.800), பட்டன் ரோஜா ரூ.240 (ரூ.200), மைசூரு ரோஜா ஒரு கட்டு (20 பூக்கள்) ரூ.100 (ரூ.70).
Related Tags :
Next Story