கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே சாலையை அகலப்படுத்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகே சாலையை அகலப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மடத்துக்குளம்,
கொழுமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தின் வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. குமரலிங்கம், உடுமலை, மடத்துக்குளம், பழனி, தாராபுரம், கீரனூர், திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு கொழுமத்தின் வழியாக பஸ்கள் இயக்கப்படுகின்றன. மேலும், ஆண்டுதோறும் வருகிற சித்திரை மாதம் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது இந்த பகுதியில் லட்சக்கணக்கானவர்கள் கூடுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில் கொழுமம் அமராவதி ஆற்றுப்பாலத்தை ஒட்டிய மேற்கு பகுதிகளில் குமரலிங்கம் செல்லும் வழியில் இருக்கும் காலியிடத்தில் பொதுமக்கள், பாதசாரிகள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஆகியோர்களின் நலன் கருதி சாலையை அகலப்படுத்த இப்பகுதி மக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடமும், கொழுமம் ஊராட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கனமழை பெய்யும் போது பள்ளமாக இருப்பதால் இப்பகுதியில் மழைநீர் அதிகளவில் தேங்குகின்றன. இதுதவிர கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் காலங்களில் பக்தர்கள் இவ்வழியாக தீச்சட்டி, முளைப்பாரி ஆகியவற்றை நேர்த்தி கடன் செலுத்த கொண்டு செல்கின்றனர்.
அவ்வாறு கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வெறும் காலில் நடந்து செல்லும் போது காலி இடங்களில் மண்ணுக்குள் மறைந்திருக்கும் கண்ணாடிகள் காலை பதம் பார்க்கிறது. வாகன நெரிசலில் சாலையில் நடந்து செல்லவும் முடியாது. எனவே இப்பகுதியில் நீண்ட கால கோரிக்கையாக உள்ள பாலத்தை ஒட்டிய இடத்தில் சாலையை அகலப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.