அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி; விரைந்து வழங்க வலியுறுத்தல்


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள பாக்கி; விரைந்து வழங்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Nov 2018 3:30 AM IST (Updated: 11 Nov 2018 1:04 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை தொழிலாளர்களுக்கு 4 மாத சம்பள தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. அதனை விரைந்து வழங்க தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உடுமலை,

உடுமலையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் உள்ளது அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை. இந்த ஆலை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான 6 மாத காலத்தை கரும்பு அரவை பருவமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2016–2017 மற்றும் 2017–2018–ம் ஆண்டு கரும்பு அரவைக்கு மழை இல்லாததால் கரும்பு மகசூல் பாதிப்பு, வறட்சி போன்றவற்றால் தேவையான கரும்பு கிடைக்காததால் கரும்பு அரவை நடக்கவில்லை.

இந்த நிலையில் 20118–2019–ம் ஆண்டு கரும்பு அரவை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. சர்க்கரை ஆலையில் எந்திரங்கள் சுத்திகரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.

இந்த ஆலை நிதி நெருக்கடியில் உள்ளதால் கடந்த ஒரு ஆண்டாக தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாதா மாதம் சம்பளத்தொகை வழங்கப்படாமல் காலம் கடந்து வழங்கப்பட்டு வருகிறது. அதனால் தொழிலாளர்களும், ஊழியர்களும் அவ்வப்போது பல்வேறு போராட்டங்களை நடத்துவதும் அதைத்தொடர்ந்து ஓரிரு மாதங்களுக்கு சம்பள நிலுவைத்தொகையை வழங்குவதுமாக இருந்து வருகிறது.

இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கடந்த மாதம் (அக்டோபர்) போனஸ் தொகையை ரூ.8 ஆயிரத்து 400 வழங்கப்பட்டது. அத்துடன் தீபாவளி பண்டிகை முன்பணமாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. இந்த பண்டிகை முன்பணம் 10 மாத காலம் சம தவணைகளில் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.

போனஸ் மற்றும் பண்டிகை முன்பணம் வழங்கப்பட்டதே தவிர சம்பளம் வழங்கப்படவில்லை. ஜூன் மாதம் வரை மட்டுமே சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை ஆகஸ்டு, செப்டம்பர் அக்டோபர் ஆகிய 4 மாதங்களுக்கு சம்பளத்தொகை வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளது. இந்த சம்பள நிலுவைத்தொகையை உடனே வழங்கும்படி ஆலை தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஆலை நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


Next Story