வேப்பூர் அருகே பரபரப்பு: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டுக்கு தர்மஅடி - தப்பிக்க விட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி சிறைவைப்பு


வேப்பூர் அருகே பரபரப்பு: இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை; போலீஸ் ஏட்டுக்கு தர்மஅடி - தப்பிக்க விட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி சிறைவைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:15 AM IST (Updated: 12 Nov 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

வேப்பூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டை கட்டிப்போட்டு கிராம மக்கள் தர்மஅடி கொடுத்தனர். அவரை தப்பிக்கவிட்ட சப்-இன்ஸ்பெக்டரை தாக்கி சிறை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

வேப்பூர், 

வேப்பூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக(தலைமை காவலர்) பணியாற்றி வருபவர் ரமேஷ். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு வழக்கு சம்பந்தமாக விசாரிப்பதற்காக வேப்பூர் அருகில் உள்ள ராமநாதபுரம் கிராமத்திற்கு சென்றார். அப்போது அந்த வழக்கில் தொடர்புடையவரின் உறவுக்காரரான 27 வயது இளம்பெண்ணிடம் ரமேஷ் பேசினார்.
அப்போது அவரது கணவர் வெளிநாட்டில் இருப்பதும், இளம்பெண் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்ததையும் ரமேஷ் தெரிந்து கொண்டார். இதையடுத்து அவரது செல்போன் எண்ணை ரமேஷ் வாங்கிக்கொண்டார்.

அன்று முதல் ரமேஷ், அந்த இளம்பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். மேலும் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சகித்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண், தனது உறவினர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், தனியாக இருக்கும் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் ஏட்டுக்கு கிராம மக்கள் மூலம் தக்க பாடம் கற்பிக்க முடிவு செய்தனர்.

இதையடுத்து உறவினர்கள், இளம்பெண்ணிடம் ரமேஷ் மீண்டும் செல்போனில் தொடர்பு கொண்டால் வீட்டிற்கு வருமாறு கூறுங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்றனர்.

அதன்படி ரமேஷ் நேற்று முன்தினம் இரவு மீண்டும், அந்த பெண்ணின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த பெண், உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறினார்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரமேஷ் மதுபாட்டில்கள், பிரியாணி பொட்டலங்கள் வாங்கிக்கொண்டு இரவு 8 மணிக்கு அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர், ஆசையோடு அந்த பெண்ணின் அருகில் நெருங்கினார். அந்த சமயத்தில் அங்கு மறைந்திருந்த உறவினர்கள், ஏட்டு ரமேசை பிடித்து கை, கால்களை கயிற்றால் கட்டினர்.

இது பற்றி அறிந்ததும் கிராம மக்கள் திரண்டு வந்து, ஏட்டு ரமேசுக்கு தர்மஅடி கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரை, அவரை மீட்பதற்காக அங்கு விரைந்து வந்தார். பின்னர் அவர், ஏட்டு ரமேஷ் கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அவிழ்த்தார். உடனே ரமேஷ், வீட்டின் பின்பக்கம் வழியாக தப்பி ஓடிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள், கட்டை அவிழ்த்து ஏட்டை தப்பிக்க வைத்தது ஏன்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரையை கிராம மக்கள், தாக்கி வீட்டிற்குள்ளேயே சிறைவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது பற்றி கிராம மக்கள் செல்போன் மூலம் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலுக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர், செல்போனிலேயே 30 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் டைமன்துரையை கிராம மக்கள் விடுவித்தனர். 

Next Story