உலக முதலீட்டாளர் மாநாட்டையொட்டி: கோவை தொழில்முனைவோர் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு


உலக முதலீட்டாளர் மாநாட்டையொட்டி: கோவை தொழில்முனைவோர் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும் - அமைச்சர் எம்.சி.சம்பத் பேச்சு
x
தினத்தந்தி 12 Nov 2018 3:30 AM IST (Updated: 12 Nov 2018 3:27 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டையொட்டி கோவை கொடிசியா மற்றும் தொழில் முனைவோர்கள் ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன் வர வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

கோவை,

தமிழக அரசின் சார்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதன் முன்னோட்டமாக கோவையில் தமிழக அரசுடன் இணைந்து, இந்திய தொழில் கூட்டமைப்பினர் நடத்தும் முதலீட்டாளர்களுக்கான தொழில் கருத்தரங்கு நேற்று நடந்தது. கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் நடந்த கருத்தரங்கிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமை தாங்கினார்.

கருத்தரங்கில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

தொழில் வளர்ச்சி மற்றும் கல்வியில் தமிழ்நாடு மிகச்சிறந்த மாநிலமாகவும், முதன்மை மாநிலமாகவும் விளங்குகிறது. தகவல் தொழில்நுட்பம், ஹார்டுவேர், சாப்ட்வேர், மோட்டார் வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தி போன்ற பலதரப்பட்ட உற்பத்தி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

அமைதியான சூழல் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பு வசதிகள், தடையில்லா மின்சாரம், தொலைத்தொடர்பு ஆகிய வசதிகளுடன் தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக, பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தங்களது முதலீடுகளை செய்துள்ளன. குறிப்பாக உலக அளவில் மிகச்சிறந்த 500 நிறுவனங்களில் 61 நிறுவனங்கள் தமிழகத்தில் தங்களது தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன. உலக முதலீட்டாளர் மாநாட்டுக்காக பல வெளிநாடுகளுக்கு சென்று தொழில்நிறுவனங் களை சந்தித்தோம். அவர் கள் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வமாக உள்ளனர்.

தமிழகத்தில் தொழில் துறையில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்ற தமிழ்நாடு வர்த்தகர்கள் சட்டம் மற்றும் விதிகள் 2017 மற்றும் இணைய அடிப்படையிலான ஒற்றை சாளர முறை ஆகிய இரண்டு முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொழில் துறையில் ஒரு மைல் கல் ஆகும். இதன் மூலம் தொழில் முனைவோர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலமாக தாங்கள் இருக்கும் இடத்திலேயே அனைத்து விதமான அனுமதிகளையும் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 136 சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இரண்டு பெரிய தொழில் நிறுவனங்கள் தொடர்பான அனைத்து அனுமதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

எனவே கோவை மாவட்டத்தை சேர்ந்த கொடிசியா மற்றும் தொழில் முனைவோர் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் சந்திப்பில் பெருமளவில் கலந்துகொண்டு ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு செய்ய முன்வர வேண்டும். சென்னையில் 52 ஏக்கர் பரப்பளவில் பாக்சட் என்ற பன்னாட்டு நிறுவனம் தொழிற்சாலையை அமைத்துள்ளது. அந்த நிறுவனம் செல்போனில் 70 சதவீத உதிரிபாகங்களை தயாரிக்கிறது. இதே போன்று மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் வர உள்ளன. சிப்காட் போன்ற தொழில் வளாகங்களை அமைக்க மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு அரசு நிலமாக இருக்க வேண்டும். ஆனால் அதுபோன்ற நிலம் கோவை மாவட்டத்தில் இல்லை. மொத்த நிலத்தையும் வாங்கி சிப்காட் போன்று தொழில் வளாகம் அமைப்பதற்கு அதிக செலவாகும். புதிதாக தொழில் தொடங்குபவர்கள் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் காலியாக இருக்கும் இடத்தில் தொழில் தொடங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் பேசியதாவது:-

புதிதாக தொடங்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த இணையவழி ஒற்றை சாளர தகவு மூலம் முதலீட்டாளர்கள் 11 அரசுத் துறைகளின் அனுமதி புதுப்பித்தல் அரசுத்துறைகளின் 37 சேவைகள் ஆகியவற்றை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த வாரம் அதாவது 9.11.2018 வரையில் பெறப்பட்ட மொத்தம் 181 விண்ணப்பங்களில் இதுவரை 378.76 கோடி ரூபாய் முதலீட்டிற்கான 132 விண்ணப்பங்களுக்கு உரிய அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.

தனியார் தொழில் அமைப்புகள் புதிய தொழில் நிறுவனங்களுக்கான புதிய தொழிற் குழுமம் மற்றும் தொழிற்பேட்டைகளை நகருக்கு வெளியே அமைக்க அரசு மானியம் 50 விழுக்காடு என்ற அளவில் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கொடிசியா தொழில் பூங்கா அமைக்க அரசு ரூ.10 கோடி ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி கோவை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் புதிய நிறுவனங்கள் தொடங்க ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை மேற்கொள்வதற்கு முன் வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில், தமிழக தொழில் துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.ஞானதேசிகன், தொழில் துறை ஆணையாளர் மற்றும் தொழில், வணிக வரித்துறையின் இயக்குனர் ராஜேந்திர குமார், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக அரசின் முதலீட்டு மேம்பாட்டு செயல் துணை தலைவர் எம்.வேல்முருகன், கோவை மாவட்ட கலெக்டர் ஹரிகரன், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் தமிழக தலைவர் எம்.பொன்னுசாமி மற்றும் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ., கொடிசியா தலைவர் ராமமூர்த்தி மற்றும் கோவையை சேர்ந்த தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story