கோவைப்புதூர் அடுக்குமாடி குடியிருப்பில் ; 170 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடுக்கான உத்தரவு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்


கோவைப்புதூர் அடுக்குமாடி குடியிருப்பில் ; 170 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடுக்கான உத்தரவு - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்
x
தினத்தந்தி 11 Nov 2018 9:45 PM GMT (Updated: 11 Nov 2018 10:19 PM GMT)

கோவைப்புதூர் அடுக்குமாடி குடியிருப்பில் 170 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடுக்கான உத்தரவை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.

கோவை,


கோவைப்புதூர் அண்ணா நகரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மற்றும் மாநகராட்சியுடன் இணைந்து 170 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஹரிகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் கண்காணிப்பு என்ஜினீயர் ஆர்.ராஜசேகரன் வரவேற்று பேசினார். 170 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான உத்தரவையும், 148 பயனாளிகளுக்கு அவர்கள் செலுத்திய பங்களிப்பு தொகை ரூ.44 லட்சத்து 75 ஆயிரத்துக்கான காசோலையையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கி பேசியதாவது:-

இங்கு 170 பயனாளிகளுக்கு வீடுகளுக்கான ஒதுக்கீடு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடு, சமுதாய வேறுபாடு, கட்சி வேறுபாடு இன்றி அனைவருக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு வீடு ஒதுக்கீடு பெற்றவர்களின் மகன், மகள்களுக்கும் அடுத்த கட்டமாக வீடுகள் வழங்கப்படும். மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது என்பது குறித்து திட்டமிட்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள ஏழை மக்கள் அனைவருக்கும் சொந்த வீடு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் அனைத்திற்கும் தெரு விளக்கு, சாலை வசதி, குடிநீர் வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் விரைவில் செய்து தரப்படும். தற்போது முதல் கட்டமாக இங்கிருந்து காந்திபுரத்துக்கு டவுன் பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிச்சி பகுதியில் வீடு இடிந்த மக்களுக்கு குடியிருக்க மாற்று வீடுகள் வழங்குவதுடன் வீட்டு உபயோக பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், எட்டிமடை சண்முகம் எம்.எல்.ஏ., மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி, தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி மற்றும் ஏராளமான பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story