முகூர்த்த நாளையொட்டி: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - அடிவாரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்


முகூர்த்த நாளையொட்டி: பழனி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள் - அடிவாரம் பகுதியில் போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 11 Nov 2018 10:00 PM GMT (Updated: 11 Nov 2018 10:33 PM GMT)

பழனி முருகன் கோவிலில் முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

பழனி, 

பழனி முருகன் கோவிலில் முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை தினத்தையொட்டி நேற்று காலையிலிருந்தே பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலில் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மின் இழுவை ரெயில் நிலையம் மற்றும் ரோப்கார் நிலையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து பயணம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் சாமி தரிசனம் செய்ய சுமார் 3 மணி நேரம் காத்திருந்தனர்.


முகூர்த்த நாளையொட்டி பழனி அடிவாரம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால் அடிவார பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் திருஆவினன்குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரிப்பால், நேற்று காலை வையாபுரி பைபாஸ் சாலை, அருள்ஜோதி வீதி மற்றும் அய்யம்புள்ளி சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. போலீஸ் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்தை சரி செய்ய முடியாமல் போலீசார் திணறினர். மதியத்திற்கு பிறகே போக்குவரத்து நெரிசல் குறைந்தது. முகூர்த்த நாள் மற்றும் திருவிழா காலங்களில் அடிவார பகுதியில் வாகனங்கள் நுழைய தடை விதிக்க வேண்டுமென பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story