மானாவாரி நிலங்களில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி


மானாவாரி நிலங்களில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பியது; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 12 Nov 2018 10:15 PM GMT (Updated: 12 Nov 2018 7:07 PM GMT)

மானாவாரி நிலங்களில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

கோபி,

வேளாண்மைத்துறையின் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. அதன்படி வேளாண்மை பொறியியல் துறை சார்பில் கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூர் மீன்கிணறு, கொளப்பலூர் அருவங்கொரை ஆகிய இடங்களில் தலா ரூ.5 லட்சம் செலவில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்பட்டன. இந்த தடுப்பணைகள் சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியது. இதனால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறுகளில் தண்ணீர் அதிகமானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கோபி வேளாண்மை உதவி இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி கூறியதாவது:–

மானாவாரி நிலங்களில் வேளாண்மை செய்யும் விவசாயிகள் மழையை மட்டுமே நம்பி உள்ளனர். இவ்வாறு மழை பெய்யும்போது நிலத்தடி நீர்மட்டம் உயருகிறது. ஆனால் முறையான மழைநீர் சேமிப்பு திட்டம் இல்லாததால் மழைநீர் வீணாக சென்றது. இதைத்தடுக்க நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகளின் பட்டா நிலங்களில் தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறுவலூர், கொளப்பலூர் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்ட தடுப்பணைகள் நிரம்பி உள்ளன. இதேபோல் மல்லநாயக்கனூர், மணியகாரன்பாளையம், சேவகம்பாளையம் ஆகிய கிராமங்களில் அமைக்கப்பட்ட 6 பண்ணை குட்டைகளும் நிரம்பியது. இதன்மூலம் விவசாயிகள் நிலக்கடலை, மக்காச்சோளம், பயறு வகைகள் போன்ற பயிர்களை சாகுபடி செய்ய உள்ளனர். மேலும், சிறுவலூர் கிராமத்தில் நீர் சேமிப்பு கட்டமைப்பாக 115 ஹெக்டேரில் சம உயர பரப்புகள் அமைக்கப்பட்டதால், நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.

தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள் அமைக்கப்படுவதால் மானாவாரி சாகுபடியிலும் மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே விவசாயிகளின் பட்டா நிலங்களில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள் அமைக்க விரும்புபவர்கள் வேளாண்மை உதவி இயக்குனர் அல்லது வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகி விண்ணப்பம் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story