‘கஜா’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை


‘கஜா’ புயல் முன்எச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்: கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை
x
தினத்தந்தி 13 Nov 2018 11:00 PM GMT (Updated: 13 Nov 2018 10:32 PM GMT)

கஜா புயலை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

கடலூர்,

கஜா புயலை எதிர்கொள்ள முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்துக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்புயல் கரையை நோக்கி நெருங்கி வந்து கொண்டு இருக்கிறது. நாளை(வியாழக்கிழமை) கஜா புயல் கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கஜா புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதோடு, பலத்த மழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் உத்தரவுப்படி போதிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மேலும் புயல் தாக்கினால், மக்களை மீட்கும் பணிக்காக வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் 78 பேர் கடலூர் மாவட்டத்துக்கு வந்து உள்ளனர். அவர்கள் கடலூர், சி.முட்லூர், சிதம்பரம் ஆகிய 3 இடங்களில் முகாமிட்டு உள்ளனர்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட கலெக்டர் அன்பு செல்வன் கூறுகையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயலை எதிர்கொள்வதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 78 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து உள்ளனர். அவர்கள் 3 குழுக்களாக பிரிந்து கடலூர், சி.முட்லூர், சிதம்பரம் ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளனர்,

இதுதவிர காவல்துறையில் பயிற்சி பெற்ற மாநில பேரிடர் மீட்பு படையினர் 117 பேரும் உள்ளனர். அவர்களும் கடலூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம் ஆகிய இடங்களில் முகாமிட்டு உள்ளனர். புயல் வந்தாலும் எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளோம் எனவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என்றார்.


Next Story