தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் தகவல்


தமிழகத்தில் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம்; மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2018 11:21 PM GMT (Updated: 13 Nov 2018 11:21 PM GMT)

இந்தியாவில் தமிழகத்தில்தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகம் உள்ளதாக மதுரை மீனாட்சி மிஷன் டாக்டர் மகேஷ்பாபு தெரிவித்தார்.

மதுரை,

உலகம் முழுவதும் இன்று (புதன்கிழமை) சர்க்கரை நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நோய் குறித்து மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சர்க்கரை நோய் சிறப்பு டாக்டர் மகேஷ் பாபு கூறியதாவது:-

தமிழகத்தில் இளம் வயதினர் மற்றும் குழந்தைகளுக்கு உடல் பருமன் மற்றும் 2-ம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. துரித உணவு மற்றும் கலாசாரம், பதப்படுத்தப்பட்ட உணவு உட்கொள்ளுதல் ஆகியவை இளம் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. குறிப்பாக மென் பொறியாளர்களிடையே நீரிழிவு நோய் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த உடல் எடையை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முதுநிலை இருதயவியல் நிபுணர் டாக்டர் கணேசன் கூறுகையில், நீரிழிவு நோய் சிறுநீரகம் மற்றும் கண்களை பாதிக்கக்கூடியது. இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் இறக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர் ஏற்கனவே இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. மேலும் வெள்ளை சர்க்கரை, வெள்ளை அரிசி, கோதுமை உள்ளிட்டவைகளை உட்கொள்வதை கட்டுப்படுத்தினால் இந்த நோய் வராமல் தடுக்கலாம் என்றார்.

சிறுநீரகவியல் நிபுணர் ஆண்ட்ரூ தீபக் ராஜிவ் கூறும்போது, இந்தியாவில் தமிழகத்தில் தான் நீரிழிவு நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 16,000-க்கும் அதிகமானோர் இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர். நீண்டகால சிறுநீரக ஆரோக்கியத்திற்கு ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த கட்டுப்பாடு முக்கியமானதாகும். ஆரோக்கியமான உணவு, தவறாத உடற்பயிற்சி, முறையான சிகிச்சை ஆகியவற்றால் இந்த நோயை கட்டுப்படுத்தலாம் என்றார்.

Next Story