புயல் பாதிப்பை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி அறிவுறுத்தினார்.
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டத்தில் புயல் பாதிப்பு தடுப்புக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் மலர்விழி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ரகமதுல்லாகான், உதவி கலெக்டர் சிவன் அருள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:–
வங்கக்கடலில் உருவாகி உள்ள கஜா புயல் காரணமாக மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரை புயல், பருவமழை ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. மழையால் இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அது குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க 251 ஊராட்சிகளிலும் தகவல் கொடுப்போர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மழை மற்றும் காற்று வீசும்போது மரங்கள், மின்கம்பங்கள் கீழே விழுந்தால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும், உரிய மீட்பு பணிகளை மேற்கொள்ளவும் தேவையான எந்திரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். புயல்மழை காரணமாக சாலைகளில் போக்குவரத்து தடைபட்டால் உடனடியாக மாற்று வழியில் வாகனங்களை திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைபாதிப்பு ஏற்பட்டால் எதிர்கொள்ள நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் மழை பெய்யும்போதும், பலத்த காற்று வீசும்போதும் வெளியிடங்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். இடி, மின்னலின்போது மரத்தடியில் ஒதுங்கி நிற்க கூடாது. மழை பெய்யும்போது ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை பாதுகாப்பான இடங்களில் கட்டி வைக்க வேண்டும். புயல் மழையால் பாதிப்புகள், இடர்பாடுகள் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் மலர்விழி பேசினார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கவிதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட அனைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.