பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்


பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 15 Nov 2018 4:15 AM IST (Updated: 14 Nov 2018 11:29 PM IST)
t-max-icont-min-icon

பசுபதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மாட வீதிகளில் நேற்று முன்தினம் கந்தசஷ்டியையொட்டி சூரசம்ஹார விழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று அந்த கோவிலில் உள்ள முருகன் சன்னதி முன்பாக முருகபெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. அப்போது அங்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்கீழே, முருகன், வள்ளி-தெய்வானையுடன் மணக்கோலத்தில் எழுந்தருளினார்.

அப்போது சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராத னையுடன் வேத மந்திரங்கள் முழங்கப்பட்டன. பின்னர் இசை வாத்தியங்கள் முழங்க முருகபெருமான் தாலி கட்டி, வள்ளி-தெய்வானையை ஏற்று கொண்டார். அப்போது அரோகரா... என கோஷம் எழுப்பி மணமக்கள் மீது பூக்களை தூவி பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கி வாழ்வில் சுபகாரியம் பிறக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில் நடந்த முருகபெருமான் திருக்கல்யாணத்தில் கரூர், திருமாநிலையூர், செங்குந்தபுரம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் இரவு 7 மணியளவில் முருகபெருமான் மயில் வாகனத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர்.

இதே போல் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணியசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடந்தது. இதில் பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.

இதேபோல் குளித்தலையை அடுத்த சத்தியமங்கலத்தில் பாலமுருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கந்தசஷ்டியையொட்டி நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர். இதேபோல் குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில், அய்யர்மலை ரத்தினகிரீசுவரர் கோவிலில்் திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண் டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story