கூடலூரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கூடலூரில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2018 11:00 PM GMT (Updated: 16 Nov 2018 9:52 PM GMT)

கூடலூரில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்யக்கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கூடலூர்,

தமிழக– கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களை இணைக்கும் பகுதியில் கூடலூர் புதிய பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்பட வில்லை. பழுதடைந்த மற்றும் உடைந்த மேற்கூரைகளால் மழைக்காலத்தில் பயணிகள் நனைந்தவாறு நிற்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் போதிய இடவசதி இல்லாததால் குறைந்த அளவு பஸ்களை மட்டுமே பஸ் நிலையத்தில் நிறுத்த முடிகிறது.

மீதமுள்ள பஸ்கள் சாலையோரம் நிறுத்தப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய கோரி நேற்று மாலை 5 மணிக்கு கூடலூர் புதிய பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஜான்சன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சி.கே.மணி, நிர்வாகி குஞ்சு முகமது மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

பின்னர் கூடலூர் அரசு போக்குவரத்து கழக கிளை அலுவலக மேலாளர் ராஜ்குமாரிடம் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில், பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். பஸ் நிலையத்தில் நவீன கழிப்பறைகள் அமைக்க வேண்டும். பழுதடைந்த பஸ்களை மாற்றி விட்டு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை குறிப்பிட்டு இருந்தனர். இதை பெற்று கொண்ட கிளை மேலாளர் உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story