நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்; கலெக்டர் தகவல்


நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு பண்ணை குட்டை அமைக்க ரூ.75 ஆயிரம் மானியம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Nov 2018 10:30 PM GMT (Updated: 16 Nov 2018 9:52 PM GMT)

பண்ணை குட்டை அமைக்க நீலகிரி மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வன அதிகாரி சுமேஸ் சோமன், வருவாய் அதிகாரி செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது கூறியதாவது:–

இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்பட்ட பசுமை குடில்களை சீரமைப்பது தொடர்பாக கருத்துருகள் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் மூலம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசிடம் இருந்து உரிய ஆணை மற்றும் நிதி ஒதுக்கீடு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளுக்கு டீசல் என்ஜின் வழங்குவது குறித்து அரசுக்கு பிரேரனை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அரசின் அனுமதி கிடைத்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு வழிகாட்டுதலின் படி, 20 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 3 மீட்டர் உயரத்தில் பண்ணை குட்டை அமைக்க விவசாயிகளுக்கு ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இந்த அளவிற்கு அமைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து வேளாண்மை பொறியியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகே அரசுக்கு அறிக்கைகள் அனுப்பப்படும். அரசு துறைகளில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கும் போது, பொதுப்பணித்துறை அதிகாரிகள் எம் சண்ட் மணல் மூலம் கட்டிடம் கட்டுவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகிறது.

ஊட்டி நகரில் ஆவின் மூலம் 21 ஆவின் பாலகங்கள் செயல்பட்டு வருகிறது. வனவிலங்குகளால் விவசாய விளைநிலங்கள் சேதம் அடைந்தால், அதனை வனத்துறை சார்ந்த அதிகாரிகள் தணிக்கை செய்து, அதன் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் மூலம் தலைமை அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டு அதற்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக நாட்களை குறிப்பிட்டு நஷ்டஈடு வழங்க இயலாது. நீலகிரி மாவட்டம் தேயிலைத்தூள் உற்பத்திக்கு பெயர் பெற்று உள்ளதால், தேயிலைத்தூளை பிரபலப்படுத்தவும், சுற்றுலா பயணிகள் தேயிலைத்தூள் பற்றி தெரிந்துகொள்ளவும் சுற்றுலாத்துறை மூலம் ஆண்டுதோறும் தேயிலை விழா நடத்தப்படுகிறது.

இந்த விழாவில் டேன்டீ, இன்கோசர்வ் மற்றும் பிரபலமான தேயிலை நிறுவனங்கள் பங்கேற்கிறது. விவசாய சங்க பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருத்தில் கொண்டு செயல்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மசினகுடி வாழைத்தோட்டம் பகுதியில் உள்ள ரே‌ஷன் கடை கட்டிடம் மோசமாக உள்ளதால் உடனடியாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


Next Story