ஆரணியில் கூட்டுறவு வார விழா: ரூ.16¾ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் அமைச்சர் வழங்கினார்
ஆரணியில் நடந்த 65-வது கூட்டுறவு வார விழாவில் ரூ.16 கோடியே 71 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.
ஆரணி,
திருவண்ணாமலை மாவட்ட அளவில் 65-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா ஆரணியில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் வே.நந்தகுமார், துணைப்பதிவாளர்கள் எ.சரவணன், கோ.யோகவிஷ்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு மகளிர் குழு நேரடிக் கடன், கறவை மாடு கடனுதவிகள், விவசாயிகளுக்கு பயிர்க்கடன்கள் உள்பட மொத்தம் 5 ஆயிரத்து 516 பேருக்கு ரூ.16 கோடியே 71 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மேலும் கடந்த ஆண்டு சிறப்பாக செயலாற்றிய மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், ஆரணி நகர கூட்டுறவு வங்கி, திருவத்திபுரம் நகர கூட்டுறவு வங்கி உள்பட 56 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு நினைவுப் பரிசுகளையும், மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகளை வழங்கி அமைச்சர் பேசினார்.
அப்போது அவர் பேசுகையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கப்படுவதோடு பாதுகாப்பு பெட்டக வசதிகளும் தனியார் வங்கிகளுக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. இப்போது ஏ.டி.எம். வசதியும் மத்திய கூட்டுறவு வங்கி சார்பாக திருவண்ணாமலையில் தொடங்கப்பட்டுள்ளது. அம்மா மருந்தகம், காய்கறி அங்காடி, பொது சேவை மையங்கள், கிடங்கு வசதி, பொது வினியோக திட்டம் கூட்டுறவு துறை மூலமாக செயல்படுத்தி வருகிறது என்றார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நளினிமனோகரன், அரங்கநாதன், உழவர் உழைப்பாளி கட்சி வேட்டவலம் மணிகண்டன், ஆரணி உதவி கலெக்டர் (பொறுப்பு) தண்டாயுதபாணி, முன்னாள் மாநில கூட்டுறவு சங்க இயக்குனர் அமுதாஅருணாசலம், கூட்டுறவாளர்கள் பி.ஆர்.ஜி.சேகர், பாரி பி.பாபு, பி.ஜி.பாபு, எஸ்.ஜோதிலிங்கம், அசோக்குமார், எம்.வேலு, கஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் கல்யாணகுமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ்செல்வன், கூட்டுறவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் துணைப்பதிவாளர் ஆர்.பிரேம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story