பாகூர் பகுதியில் ஏரிகள், அணைகள் நிரம்பின; விவசாயிகள் மகிழ்ச்சி


பாகூர் பகுதியில் ஏரிகள், அணைகள் நிரம்பின; விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 Nov 2018 12:02 AM GMT (Updated: 18 Nov 2018 12:02 AM GMT)

பாகூர் பகுதியில் ஏரிகள், அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பாகூர்,

புதுவை மாநிலம் பாகூர் பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் முதல் மழையும், வெயிலும், பனிபொழிவுமாக இருந்து வருகிறது. முன்கூட்டியே பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு சார்பில் ஏரி சங்கங்கள் உதவியுடன் பாசனவாய்க்கால், ஆற்று வாய்க்கால், ஏரிவரத்து வாய்க்கால்கள் பெரும்பாலனவை து£ர்வாரப்பட்டு இருந்ததால் சமீபத்தில் பெய்த மழை நீரை கொண்டு ஏரிகளில் நிரப்பி வருகின்றனர்.

இதன்மூலம் பாகூரை சுற்றியுள்ள 24 ஏரிகளில் சித்தேரி, மணப்பட்டு, உச்சிமேடு, சேலியமேடு, இருளன்சந்தை, சோரியாங்குப்பம், கீழ்பரிக்கல்பட்டு, அரங்கனூர், கிருமாம்பாக்கம் சின்ன ஏரி, கரையாம்புத்தூர் ஒடப்பேரி, பனயடிக்குப்பம் சின்ன மற்றும் பெரிய ஏரி, கடுவனு£ர் ஓட்டந்தாங்கல் ஏரி உள்ளிட்ட 12 ஏரிகள் நிரம்பின.

மாநிலத்திலேயே 2–வது பெரிய ஏரியான பாகூர் ஏரி 12 அடி கொள்ளளவில் தற்போது 6 1/2 அடியாக நிரம்பி உள்ளது. இந்த நீரை கொண்டு சுமார் 4 மாதங்கள் விவசாயத்துக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் 12 ஏரிகளை நிரப்ப பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமரை புகழேந்தி, உதவி பொறியாளர் சங்கர் தலைமையில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தென்பெண்ணையாறு குறுக்கே கட்டப்பட்டுள்ள சித்தேரி அணைக்கட்டு, கொம்மந்தான் மேடு படுகை அணை நிரம்பி வழிகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


Next Story