மணல் கடத்தலை தடுக்க சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - விழுப்புரம் அருகே பரபரப்பு


மணல் கடத்தலை தடுக்க சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி - விழுப்புரம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 8:21 PM GMT)

விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வளவனூர்,

விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமிக்கு அரசமங்கலம் பகுதியில் லாரிகளில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதை தடுக்கும் வகையில், அந்த பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை இன்ஸ்பெக்டர் லட்சுமி நிறுத்த முயன்றார்.

ஆனால், அதை ஓட்டி வந்த டிரைவர் லாரியை நிறுத்தாமல் இன்ஸ்பெக்டர் லட்சுமி மீது மோதுவது போன்று வேகமாக வந்தார். இதில் சுதாரித்துக்கொண்ட அவர், விலகி விட்டார். இதன்பின்னர் போலீசார் தங்களது வாகனத்தில் துரத்தி சென்று அந்த லாரியை மடக்கினர்.

அப்போது நடுரோட்டில் லாரியை நிறுத்திய டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து லாரியில் வந்த அதன் உரிமையாளர் அரசமங்கலத்தை சேர்ந்த கேசவன் மகன் ஜகன்நாதன்(வயது 26) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

தொடர்ந்து லாரியை பறி முதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் தப்பி ஓடிய டிரைவர் அதேபகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் சீனுவாசன் என்பது தெரியவந்தது. மேலும் லாரியில் மணல் கடத்தி வந்ததால், போலீசில் சிக்கி கொள்ள கூடாது என்பதற்காக டிரைவர் சீனுவாசன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்து ஜகன்நாதனை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சீனுவாசனை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Next Story