‘கஜா’ புயல் கோரத்தாண்டவம்: 3 கோழிப்பண்ணைகளை துவம்சம் செய்தது; 5 நாட்களான குஞ்சுகள் செத்தன


‘கஜா’ புயல் கோரத்தாண்டவம்: 3 கோழிப்பண்ணைகளை துவம்சம் செய்தது; 5 நாட்களான குஞ்சுகள் செத்தன
x
தினத்தந்தி 19 Nov 2018 11:00 PM GMT (Updated: 19 Nov 2018 7:21 PM GMT)

கீரனூர் பகுதியில் கோரத்தாண்டவம் ஆடிய ‘கஜா’ புயல் அப்பகுதியில் 3 கோழிப்பண்ணைகளை துவம்சம் செய்தது. 5 நாட்களான வளர்ப்பு குஞ்சுகள் செத்தன. தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. குலைதள்ளிய வாழைகள் அழிந்தன.

கீரனூர்,

எவ்வளவுதான் வெயில் அடித்தாலும் தாங்கி கொள்ளும் நிலை அனைவருக்கும் உள்ளது. அதே வேளையில் பெரும் மழையையும், புயலையும் தாங்கி கொள்ள முடியாது என்பதை கோரத்தாண்டவம் ஆடிய ‘கஜா’ புயல் நிரூபித்துள்ளது. மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று, சுழன்று பம்பரம்போல ஆடிய சூறாவளிக்கு லட்சக்கணக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பிள்ளையை வளர்ப்பதுபோல பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்து கிடப்பதை கண்டு விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து 10 கிலோ மீட்டருக்கு அப்பால் ஒடுகம்பட்டி-கொழிஞ்சிபண்ணை சாலையில் லட்சுமணன்பட்டியை சேர்ந்த விவசாயி ராமைய்யாவின் தென்னந்தோப்புக்குள் புகுந்த ‘கஜா’ புயல் அங்கு பேயாட்டம் ஆடி நிலைகுலைய செய்து நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு சாய்த்து விட்டது. மேலும் அவரின் தோட்டத்தில் குலைதள்ளிய நிலையில் இருந்த வாழைகளையும் விட்டு வைக்காமல் வீழ்த்தி விட்டது.

இதுகுறித்து விவசாயி ராமைய்யா கூறுகையில்,“தென்னந்தோப்பில் இருந்த 950 மரங்களில் கஜா புயலால் 413 மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. மேலும் மரங்களில் குருத்து பகுதியும் புயலின் தாக்கத்தால் தலை தொங்கிய நிலையில் உள்ளன. வீழ்ந்து கிடக்கும் மரங்களை பார்த்தாலே கண்ணீர் வடிகிறது. அத்துடன் நன்கு குலை தள்ளிய நிலையில் உள்ள 300 வாழைகளும் புயலுக்கு சாய்ந்து விட்டன.

இதுதொடர்பாக கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்து இருக்கிறேன்” என்றார்.

அதேபோல குன்றாண்டார் கோவில் ஒன்றியம் கொங்கதிரையன்பட்டி கிராமத்தில் விவசாயி முனியன் என்பவரது மாட்டு கொட்டகை கஜா புயலில் சேதமடைந்து இருக்கிறது. ஒரு கன்றுக்குட்டியும் இறந்து விட்டது. அத்துடன் அவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையையும் புயல் துவம்சம் செய்து விட்டது. அங்கு பொரித்து 5 நாட்களான கோழிக்குஞ்சுகள் ஆயிரக்கணக்கில் செத்தன.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட முனியன் கூறுகையில்,‘ 10 மாடுகளை வைத்து மாட்டு பண்ணையும், சொந்தமாக கோழிப்பண்ணையும் கடன் வாங்கி நடத்தி வருகிறேன். பொரித்து 5 நாட்களான கோழிக்குஞ்சுகளை இறைச்சிக்காக பண்ணையில் வளர்த்தேன். 16-ந் தேதி அதிகாலை 3 மணிக்கு புயல் தாக்கியதில் கோழிப்பண்ணை மேற்கூரை பறந்து 500 அடிக்கு அப்பால் தூக்கி வீசப்பட்டு சின்னா பின்னமாகி விட்டது. பண்ணையில் இருந்த 7,500 கோழிக்குஞ்சுகளில் பெரும்பாலானவை செத்து விட்டன. மேலும் மாட்டுக்கொட்டகையும் காற்றில் பறந்து விட்டது. ஒரு கன்றுக்குட்டியும் இறந்து விட்டது. பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட அதிகாரிகள் யாரும் வரவில்லை. நாங்களே புகைப்படம் எடுத்து அதை மனுவாக வாழியம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியிடம் வழங்கி இருக்கிறோம். ரூ.18 லட்சம் வரை சேதமாகி விட்டது. இனி எப்படி வாங்கிய கடனை அடைக்க போகிறேன் என தெரியவில்லை” என கண்ணீர் மல்க கூறினார்.

இதேபோல சவேரியார்பட்டினத்தில் ஆரோக்கியசாமி என்பவரது கோழிப்பண்ணையில் புயலால் மேற்கூரை சரிந்தும், மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தும் நாசமாகி விட்டது. மேலும் கருப்புடையான்பட்டி கிராமத்தில் செந்தில்குமார் என்பவரது கோழிப்பண்ணையும் கஜா புயலுக்கு தப்பவில்லை. மேற்கூரை காற்றில் பறந்தும், அருகில் இருந்த வீடும் இடிந்து நாசமாகி உள்ளது.

நிவாரண உதவி கிடைக்குமா? என பாதிக்கப்பட்டவர்கள் விழி பிதுங்கிய நிலையில் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

Next Story