ரோந்து பணியின்போது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்


ரோந்து பணியின்போது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Nov 2018 4:45 AM IST (Updated: 20 Nov 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து பணியின்போது மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் நிலைதடுமாறி விழுந்த சப்-இன்ஸ்பெக்டர் காலில் லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த அவரது, கால் அகற்றப்பட்டது.

பூந்தமல்லி,

பூந்தமல்லி முத்துக்குமரன் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 55). நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி பிரேமா. இவர்களுக்கு பிரவினா(27) என்ற மகளும், நவீன்(24) என்ற மகனும் உள்ளனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை நேற்று முன்தினம் மாலை மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். பூந்தமல்லி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாப்பான்சத்திரம் அருகே சாலையை கடந்துசெல்ல முயன்றார்.

அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்கள் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த லாரி, இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரது வலது கால் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது.

படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏழுமலையின் காலில் முட்டுக்கு கீழே அதிகளவில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளதால் அந்த காலை அகற்றவேண்டும் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலையின் வலது காலில், முட்டுக்கு கீழே உள்ள பகுதி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரான அந்தோணி(56) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story