கீழக்கரை துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை, பொதுமக்கள் பாதிப்பு


கீழக்கரை துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை, பொதுமக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 3:45 AM IST (Updated: 21 Nov 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கரை துணை மின் நிலையத்தில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கீழக்கரை,

 கீழக்கரை துணை மின் நிலையத்தில் இருந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீட்டு மின் இணைப்புகளும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர இப்பகுதியில் 17–க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், வங்கிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இதுதவிர கீழக்கரையை ஒட்டி சின்ன மாயாகுளம், பெரிய மாயாகுளம், புது மாயாகுளம், பாரதிநகர், அளவாய்கரைவாடி, செங்கல் நீரோடை, சிவகாமிபுரம், லட்சுமிபுரம், முள்ளுவாடி, மாவிலாதோப்பு ஆகிய கிராமங்கள் உள்ளன. தற்போது கீழக்கரை மின் நிலையத்தில் நிரந்தர பணியாளர்கள் 2 பேர் மட்டுமே உள்ளனர். 8–க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். இதில் சில பணியாளர்கள் 12 வருடத்திற்கும் மேலாக தற்காலிக பணியாளர்களாகவே பணியாற்றி வருகின்றனர். எந்த மின் பணியாளர் எந்த பகுதிக்கு செயல்படுகிறார் என்ற விவரங்கள் யாருக்கும் தெரியவில்லை.

இது குறித்து முன்னாள் கவுன்சிலர் முகைதீன் இப்ராகிம் கூறுகையில், கீழக்கரை மின் வாரிய அலுவலகத்தில் பல ஆண்டுகளாக தொலைபேசி வேலை செய்யவில்லை. எந்த பகுதியிலாவது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அலுவலக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் உடனடியாக சரி செய்ய வருவார்கள். ஆனால் பல ஆண்டுகளாக இந்த தொலைபேசி வேலை செய்யாததால் இப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

மேலும் கீழக்கரை அலுவலகத்தில் உதவி பொறியாளர் பணியிடமும் காலியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக பணியாளர்களை நியமித்து மின் குறைபாடு சம்பந்தமாக பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.


Next Story