தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்றிட வேண்டும் அமைச்சர் அறிவுரை


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்றிட வேண்டும் அமைச்சர் அறிவுரை
x
தினத்தந்தி 21 Nov 2018 4:00 AM IST (Updated: 21 Nov 2018 3:24 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கிருஷ்ணகிரியை மாற்றிட அலுவலர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். பர்கூர் சி.வி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசியதாவது:-

தமிழக அரசின் உத்தரவின்படி வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் 7 வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. அதை தவிர்க்க மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டும். தமிழக அரசு பிளாஸ்டிக் விரிப்புகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல்கள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட டீ கப்புகள், தம்ளர்கள், பிளாஸ்டிக் தூக்கு பைகள், பிளாஸ்டிக் கொடிகள், பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

இதற்கு மாற்றாக பேப்பர் ரோல், வாழை இலை, பாக்கு மட்டைகள், அலுமினியம் பாயில், தாமரை இலை, கண்ணாடி, உலோக தம்ளர்கள், பேப்பர் ஸ்டிரா, துணி காகிதம், சணல் பைகள், காகித கொடிகள், சில்வர் குடுவைகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள், ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள் அனனவரும் மேற்கண்ட தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்தி, நமது கிருஷ்ணகிரி மாவட்டத்தை தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்றிட அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி பேசினார்.

இந்த கூட்டத்தில் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர் பழனிசாமி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சுசீலாராணி, வேளாண்மை துணை இயக்குனர் அகண்டராவ் மற்றும் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள், கல்லூரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Next Story