குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில்: சென்னையில் இருந்து 25 டேங்கர் லாரிகள் திருவாரூருக்கு வந்தன
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க சென்னையில் இருந்து 25 டேங்கர் லாரிகள் திருவாரூருக்கு வந்துள்ளன.
திருவாரூர்,
கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி வாழ்வாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் முகாமிட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் 20 ஆயிரம் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
ஜெனரேட்டர் உதவியுடன் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
இந்த நிலையில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சென்னை கிண்டி, ஆலந்தூர், மேடவாக்கம், தாம்பரம் போன்ற பகுதிகளில் இருந்து குடிநீர் கொண்டு செல்லும் 25 தனியார் டேங்கர் லாரிகள் அரசு சார்பில் திருவாரூருக்கு நேற்று முன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.
இந்த லாரிகள் திருவாரூர்் நகராட்சி அருகில் தெற்கு வீதியில் வரிசையாக நிறுத்தப்பட்டன. நகராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து டேங்கர் லாரிகளில் தண்ணீர் நிரப்பப்பட்டு திருவாரூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று மக்களுக்கு குடிநீர் வினியோகிக்க திட்டமிடப்பட்டது. இந்த லாரிகளுக்கு உரிய உத்தரவு வருவாய்த்துறையினரால் வழங்கப்படாததால் நேற்று மாலை லாரிகள் காத்து நின்றன.
Related Tags :
Next Story