‘கஜா’ புயல் பாதித்த பகுதிகளுக்கு தேனியில் இருந்து ரூ.43½ லட்சம் நிவாரணப் பொருட்கள் - கலெக்டர் தகவல்
‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேனி மாவட்டத்தில் இருந்து இதுவரை ரூ.43½ லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.
தேனி,
‘கஜா’ புயலால் டெல்டா மாவட்டங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேனி மாவட்டத்தில் இருந்த பல்வேறு கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம் வழியாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் ரூ.21 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வாகனங்களில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த பொருட்கள் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள், தன்னார்வலர்களால் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டவை. இவை மொத்தம் 7 வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டன. இதில் 6 வாகனங்கள் நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும், ஒரு வாகனம் புதுக்கோட்டைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த வாகனங்களை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வழியனுப்பி வைத்தார்.
அப்போது கலெக்டர் பல்லவி பல்தேவ் கூறுகையில், ‘மாவட்டத்தில் இருந்து இதுவரை 15 வாகனங்கள் மூலம் ரூ.43½ லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் புயல் பாதித்த பகுதிகளான புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நிவாரண பொருட் களை வழங்க விரும்பினால் அப்பகுதிகளில் நிவாரண பொருட்களை சேகரிப்பதற் காக ஏற்பாடு செய்யப்படும்’ என்றார்.
அப்போது மாவட்ட வன அலுவலர் கவுதம், உதவி கலெக்டர் (பயிற்சி) தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, தேனி எல்.எஸ்.மில்ஸ் நிர்வாக இயக்குனர்கள் பிரபாகரன், மணிவண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.
போடி நகர வர்த்தக சங்கம் சார்பில், ‘கஜா’ புயல் நிவாரணத்திற்காக போடியில் உள்ள வர்த்தகர்களிடம் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இவ்வாறு சேகரிக்கப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை போடி வர்த்தக சங்க தலைவர் அய்யனார், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் சண்முகம் ஆகியோர் வேன் மூலம் தேனி கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story