அரசடிவண்டல் கிராம பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு


அரசடிவண்டல் கிராம பகுதி விவசாயத்திற்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 24 Nov 2018 11:00 PM GMT (Updated: 24 Nov 2018 7:49 PM GMT)

அரசடிவண்டல் கிராம பகுதி விவசாயத்திற்க தண்ணீர் திறக்கப்பட்டது.

நயினார்கோவில்,

நயினார்கோவில் அருகே உள்ள அரசடிவண்டல் கிராம பகுதி விவசாய பாசனத்துக்காக கால்வாய் மடையில் தண்ணீர் திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைச்சர் மணிகண்டன் தலைமை தாங்கி கால்வாய் மடையில் தண்ணீரை திறந்து வைத்தார்.

மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் முன்னிலை வகித்தார். நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரஜினிகாந்த், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் துரை வினோத், பாண்டியூர் முத்துராமன், நயினார்கோவில் கிளை செயலாளர் கருப்பையா, வாணியவல்லம் ஊராட்சி செயலாளர் நாகநாதன், சோலைமுருகன், நயினார்கோவில் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சுமார் 15,000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று அமைச்சர் தெரிவித்தார். அப்போது விவசாயிகள் நயினார்கோவில் பகுதிக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய்களில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் இன்னும் இரண்டு நாட்களில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

பின்னர் கடந்த ஆண்டு அரசடிவண்டல் கிராமத்தில் உள்ள கால்வாயில் விழுந்து பலியான 2 கல்லூரி மாணவர்களின் பெற்றோர் அமைச்சரிடம் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து அமைச்சர் மணிகண்டன் அவர்களுக்கு நிதி உதவி அளித்ததுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் வழங்குமாறு மாவட்ட கலெக்டரிடம் கூறினார்.


Next Story