காரைக்காலில் ஏலச்சீட்டு நடத்தி 27 பேரிடம் ரூ.65 லட்சம் மோசடி, பெண் கைது


காரைக்காலில் ஏலச்சீட்டு நடத்தி 27 பேரிடம் ரூ.65 லட்சம் மோசடி, பெண் கைது
x
தினத்தந்தி 24 Nov 2018 11:15 PM GMT (Updated: 24 Nov 2018 8:08 PM GMT)

காரைக்காலில் ஏலச்சீட்டு நடத்தி 27 பேரிடம் ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக பெண் கைது செய்யப்பட்டார். அவரது கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

காரைக்கால்,

காரைக்கால் கிராம்பு தோட்டத்தை சேர்ந்தவர் வளவன் அசோகன் (வயது52). இவருடைய மனைவி வளவன் கவிதா (42). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவர்கள். இந்த தம்பதி ஏலச் சீட்டு நடத்தி வந்தனர். இவர்களிடம் நிரவி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குபேந்திரன் ஏலச்சீட்டில் சேர்ந்தார்.

ஏலச்சீட்டு முடிந்தநிலையில் குபேந்திரனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்தை கொடுக்காமல் கடந்த ஓராண்டாக பிரெஞ்சு தம்பதியர் ஏமாற்றி வந்தனர். பலமுறை கேட்டும் பணம் தராததால் காரைக்கால் நகர போலீசில் குபேந்திரன் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரெஞ்சு தம்பதியை அழைத்துப் பேசினர். அப்போது அவர்கள் ஒரு வாரத்தில் குபேந்திரனுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடுவதாக தெரிவித்தனர். ஆனால் அதன் பிறகும் பணம் கொடுக்காததால் குபேந்திரன் மீண்டும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதுபற்றி அறிந்து மேலும் 26 பேர் வந்து தாங்களும் பிரெஞ்சு தம்பதியிடம் சீட்டு கட்டி உள்ளோம் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். குபேந்திரன் உள்பட 27 பேரிடம் பிரெஞ்சு தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி சுமார் ரூ.65 லட்சம் மோசடி செய்து இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து பிரெஞ்சு தம்பதி தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவந்தனர்.

இந்தநிலையில் பிரெஞ்சு தம்பதி தஞ்சாவூரில் தலைமறைவாக இருப்பதாக காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் நேற்று காலை தஞ்சாவூர் சென்று தலைமறைவாக இருந்த வளவன் கவிதாவை கைது செய்தனர். தொடர்ந்து அவருடைய கணவர் வளவன் அசோகனை தேடி வருகின்றனர்.

Next Story