கொடைக்கானல் வனப்பகுதியில் புயலால் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன


கொடைக்கானல் வனப்பகுதியில் புயலால் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன
x
தினத்தந்தி 24 Nov 2018 10:45 PM GMT (Updated: 24 Nov 2018 8:22 PM GMT)

‘கஜா’ புயலால் கொடைக் கானல் வனப்பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன.

கொடைக்கானல், 

‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் பகுதியில் கடந்த 16-ந் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த புயல் மழையால் கொடைக்கானல் சின்னாப்பின்னமானது. கொடைக்கானலில் இருந்து பழனி, வத்தலக்குண்டு, மேல்மலைக்கிராமங்களுக்கு செல்லும் மலைப்பாதைகளில் மண்சரிவு ஏற்பட்டது. ஒரு சில பகுதிகளில் மண்சரிவு இன்றளவும் அகற்றப்படாமல் இருக்கிறது.

மலைப்பாதையில் ஆயிரக் கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் மின்வினியோகமும் பாதிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரத்துக்கு மேல் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்தது. தற்போது ஓரளவுக்கு நிலைமை சரியாகியுள்ளது. இதனையடுத்து பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் ‘கஜா’ புயல் காரணமாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடங்களில் லட்சக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்து உள்ளது தெரிய வந்துள்ளது. பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மரங்கள் வனப்பகுதிகளில் கிடக்கின்றன. குறிப்பாக உப்புப்பாறைமெத்து, அடுக்கம்ரோடு உள்ளிட்ட வனப்பகுதியில் ராட்சத மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. இவற்றை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். மேலும் அதற்கு பதிலாக புதிய மரங்களை நடுவதற்கு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மலைப்பகுதி முழுவதிலும் ‘கஜா’ புயல் காரணமாக சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்துள்ளது. எனவே வனத்துறையினர் இந்த மரங்களை பாதுகாப்பாக அகற்றி உரிய முறையில் விற்பனை செய்ய வேண்டும் என்றனர்.

Next Story