நாகை மாவட்டத்தில்: தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உடனுக்குடன் குடிநீர் வழங்க ஏற்பாடு - அமைச்சர் வேலுமணி தகவல்


நாகை மாவட்டத்தில்: தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உடனுக்குடன் குடிநீர் வழங்க ஏற்பாடு - அமைச்சர் வேலுமணி தகவல்
x
தினத்தந்தி 26 Nov 2018 3:45 AM IST (Updated: 26 Nov 2018 1:32 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உடனுக்குடன் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.

நாகப்பட்டினம், 

நாகை வடக்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடிநீர் தேவைக்காக கைப்பம்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதை அமைச்சர் வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, வேதாரண்யம், கீழையூர், கீழ்வேளூர், திருமருகல், தலைஞாயிறு உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 2 ஆயிரத்து 863 கைப்பம்புகள் அமைக்கும் பணி ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.

நாகை மாவட்டத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் 96 ஜெனரேட்டர்கள் மூலமும், 62 குடிநீர் லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளை கண்டறிந்து உடனுக்குடன் குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த பணியில் என்ஜினீயர்கள் 42 பேர் மற்றும் மின்வாரிய பணியாளரை கொண்ட 14 குழுக்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை குடிநீர் வாரியம் மூலம் நாகை மாவட்டத்தில் 32 லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தங்க.கதிரவன் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story