புதுப்பேட்டை அருகே பரபரப்பு: மணல் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு


புதுப்பேட்டை அருகே பரபரப்பு: மணல் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டம் - போலீசாருடன் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 27 Nov 2018 3:45 AM IST (Updated: 27 Nov 2018 2:31 AM IST)
t-max-icont-min-icon

புதுப்பேட்டை அருகே மணல் குவாரிக்கு எதிராக கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ளது எனதிரிமங்கலம் கிராமம். இந்த பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து, தினசரி பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் மணல் அள்ளி செல்லப்படுகிறது.

இந்த குவாரி தொடங்கப்பட்ட நாள் முதல் இருந்தே எனதிரிமங்கலம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மணல் குவாரி இயங்குவதால் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விவசாய பணிகளும் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று கிராம மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் குவாரியில் இருந்து மணல் அள்ளிக்கொண்டு லாரிகள் கிராமத்தின் வழியாக சென்றது. அப்போது கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு லாரிகளை சிறைபிடித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது இங்கு செயல்படும் மணல் குவாரியால் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது எனவே உடனடியாக மணல் குவாரியை மூட வேண்டும். அப்போது தான் இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார், கிராம மக்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, தள்ளு முள்ளு உருவானது. தொடர்ந்து வேறு வழியின்றி பேராட்டத்தில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்பட 45 பேரை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் புதுபேட்டையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எனவே போலீசார் அங்கு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

Next Story