நொய்யல் ஆற்றங்கரையில்: ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்


நொய்யல் ஆற்றங்கரையில்: ஆக்கிரமிப்பு வீடுகளை காலி செய்ய நோட்டீஸ்
x
தினத்தந்தி 27 Nov 2018 9:30 PM GMT (Updated: 27 Nov 2018 7:37 PM GMT)

கோவை நொய்யல் ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் நோட்டீஸ்கொடுத்தனர்.

சிங்காநல்லூர்,

ஆறு, குளம், ஏரி போன்ற நீர் நிலைகளின் ஓரங்களில் குடியிருப்பவர்களின் வீடுகளை காலி செய்து அவர்களை மாற்று இடங்களில் குடியமர்த்த வேண்டும் என்று ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

அதன் அடிப்படையில் கோவை வாலாங்குளம், முத்தண்ணன்குளம், சீரநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள குளக்கரைகளில் குடியிருந்தவர்களை வெள்ளலூர், கீரணத்தம், கோவைப்புதூர் ஆகிய இடங்களில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒண்டிப்புதூரை அடுத்த காமாட்சிபுரத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 183 வீடுகளை காலி செய்ய கோவை கிழக்கு பிரிவு நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நேற்று நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி குடிசை மாற்று வாரிய இளநிலை பொறியாளர் ராஜேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சண்முகராஜா, பணி ஆய்வாளர் பாலசுப்பிரமணியம், பாசன உதவியாளர் ராஜேஷ்குமார், இருகூர் கிராம நிர்வாக அதிகாரி நவீன்குமார் ஆகியோர் சிங்காநல்லூர் போலீசாரின் உதவியுடன் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று 21 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு நோட்டீஸ் வழங்கினார்கள். அதன்படி வீடுகளை காலி செய்யா விட்டால் அரசு உத்தரவுப்படி அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்படும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

ஏற்கனவே 3 தடவை இந்த பகுதியில் உள்ள மக்களை காலி செய்ய வேண்டும் என்று கூறினோம். அவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளை காலி செய்து விட்டனர். இன்னும் சிலர் காலி செய்யாமல் உள்ளனர்.

இங்கு குடியிருந்தவர்களுக்கு சூலூர் அருகே செங்கத்துறை புது நகரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனவே இந்த பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஒத்துழைத்து வீடுகளை காலி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து அங்கு வசித்து வருபவர்கள் கூறுகையில், இந்த இடத்தில் 50 ஆண்டுகாலமாக வசித்து வருகிறோம். தற்போது வேலைக்கு இங்கிருந்து தான் செல்ல முடிகிறது. இந்த பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் தான் எங்கள் குழந்தைகளை சேர்த்து உள்ளோம்.

இப்படி திடீரென்று எங்களை காலி செய்ய சொன்னால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதோடு, குழந்தைகளின் படிப்பும் வீணாகும் என்றனர்.

Next Story