வேலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்


வேலூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 27 Nov 2018 10:43 PM GMT (Updated: 27 Nov 2018 10:43 PM GMT)

வேலூரில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ராமன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் வேலூர் டவுன் ஹாலில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமி‌ஷனர் சிவசுப்பிரமணியம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், மாநகராட்சி சுகாதார அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராமன் தலைமை தாங்கி, ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். டவுன் ஹாலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் பழைய பஸ்நிலையம், லாங்குபஜார், பில்டர்பெட் ரோடு, அண்ணா கலையரங்கம், கோட்டை காந்திசிலை வழியாக வந்து மீண்டும் டவுன் ஹாலில் நிறைவடைந்தது.

இதில், பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள் கலந்து கொண்டு ‘தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது புற்றுநோயை உண்டாக்கும், கடைகளுக்கு செல்லும்போது துணிப்பைகளை எடுத்து செல்வோம்’ என்பது உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலெக்டர் மற்றும் அதிகாரிகளும் மாணவ–மாணவிகளுடன் நடந்து சென்று லாங்கு பஜாரில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினர். மேலும் பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளித்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக கலெக்டர் ராமன் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து உறுதிமொழி வாசிக்க, அதனை மாணவ–மாணவிகள் ஏற்றுக்கொண்டனர். இதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்கள் ரதி (வேலூர்), பன்னீர்செல்வம் (வாணியம்பாடி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story