பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி


பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 28 Nov 2018 10:47 PM IST)
t-max-icont-min-icon

பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மத்தூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பெனுகொண்டாபுரம் ஏரி உள்ளது. சுமார் 450 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரிக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு மத்தூர் ஆற்றில் இருந்து வண்ணான்துறை கால்வாய் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது.

மத்தூர் ஆறு வறண்ட நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் நெடுங்கல் அணையில் இருந்து கால்வாய் மூலம் பாரூர் பெரிய ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. பாரூர் ஏரி நிரம்பியவுடன் உபரிநீர் கால்வாய் மூலம் பெனுகொண்டாபுரம் ஏரிக்கு வந்து சேரும். பிரதான கால்வாய் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த ஏரி தற்போது நிரம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பகுதி விவசாயிகள் 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று நேற்று பெனுகொண்டாபுரம் ஏரியில் இருந்து 2-ம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் கலந்து கொண்டு தண்ணீரை திறந்து வைத்து மலர் தூவினார். ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நிகழ்ச்சியில் பாசன விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், கூட்டுறவு சங்க தலைவர் சக்தி, குன்னத்தூர் பெருமாள், முருகன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story