வேடசந்தூர் அருகே: ரெயில்வே சுரங்கப்பாதை பணியின்போது வெடி வெடித்து தொழிலாளி பலி - மற்றொருவர் படுகாயம்
வேடசந்தூர் அருகே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, பாறைகளை தகர்க்க வைத்த வெடி வெடித்து தொழிலாளி பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பாறைப்பட்டி என்ற ஊர் உள்ளது. இந்த ஊர் வழியாக திண்டுக்கல்-கரூர் ரெயில் தண்டவாளம் செல்கிறது. இதற்கிடையே புளியம்பட்டி-கூம்பூர் செல்லும் பாதையில், பாறைப்பட்டியில் உள்ள ரெயில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில், கடந்த சில நாட்களாக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணியில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். சுரங்கப்பாதை அமைக்க பள்ளம் தோண்டியபோது, அங்கு பாறைகள் இருந்துள்ளது. இதனால் அதனை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாறையை தகர்க்க வெடி வைத்தபோது, அது எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இந்த விபத்தில், நாமக்கல் மாவட்டம் வீமநாயக்கனூரை சேர்ந்த அனுமந்தன் மகன் மணிகண்டன் (வயது 29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் மணிகண்டன் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்தபோது, அனுமந்தன் மகன் மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்றொரு மணிகண்டனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர்.
போலீஸ் விசாரணையில், அந்த வெடியை 2 நாட்களுக்கு முன்பே அங்கு வைத்தது தெரியவந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தொழிலாளர்கள் வெடி வைத்து பாறைகளை தகர்த்துள்ளனர். அப்போது ஒரு வெடி மட்டும் வெடிக்காமல் இருந்துள்ளது. இந்த நிலையில் நேற்று சுரங்கப்பாதை அமைக்கும் பணியின்போது, வெடி வைத்துள்ளனர்.
அப்போது, ஏற்கனவே வெடிக்காத வெடி இருந்த இடத்தில் மீண்டும் வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். இதற்காக அந்த வெடி இருந்த பகுதியில், எந்திரம் மூலம் துளையிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தான், அந்த வெடி திடீரென வெடித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து எரியோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திண்டுக்கல் கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story