விருதுநகர் மாவட்டத்தில் ரூ.7,882 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு - கலெக்டர் சிவஞானம் தகவல்


விருதுநகர் மாவட்டத்தில் ரூ.7,882 கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு - கலெக்டர் சிவஞானம் தகவல்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 9:37 PM GMT)

விருதுநகர் மாவட்டத்தில் வரும் 2019-20-ம் நிதியாண்டில் நபார்டு வங்கி மூலம் ரூ.7,882 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வரும் 2019-20-ம் நிதியாண்டிற்கான வங்கிக் கடன் இலக்கு திட்டத்தை வெளியிட்டு கலெக்டர் சிவஞானம் பேசியதாவது:-

நபார்டு வங்கி மூலம் விருதுநகர் மாவட்டத்தில் வரும் நிதியாண்டிற்கான வங்கிக் கடன் இலக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்ட அறிக்கையின்படி இம்மாவட்டத்தில் ரூ.7,882 கோடியே 38 லட்சம் வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மதிப்பீடு நடப்பு ஆண்டை விட 6 சதவீதம் அதிகம் ஆகும்.

இந்த திட்ட அறிக்கை மாவட்டத்தின் கடன் திட்டமிடுதலின் ஒரு அங்கமாக இருந்து வங்கிகளுக்கு கிளை அளவிலான கடன் குறியீட்டை நிர்ணயம் செய்வதற்கு உதவியாக இருக்கும். இந்த அறிக்கை ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில் உள்ள ஒதுக்கீடுகளை அடிப்படையாக வைத்து தயார் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் விஸ்வநாதன், ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்குமார் வேணு, மாவட்ட நபார்டு வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் விஸ்வநாதன் மற்றும் வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story