நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வழக்கு: சிவகங்கை கலெக்டர், ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கம்


நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வழக்கு: சிவகங்கை கலெக்டர், ஐகோர்ட்டில் ஆஜராகி விளக்கம்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 10:10 PM GMT)

நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிய வழக்கு விசாரணைக்காக சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் நேற்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மதுரை, 

மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மதுரை மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கலெக்டர்களை எதிர்மனுதாரர்களாக சேர்த்தது. 5 மாவட்டங்களிலும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டில் இருந்து காணொலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

அப்போது நீர்நிலைகள் மீட்பு குழுவை சேர்ந்த வக்கீல்கள் வீராகதிரவன், ஆர்.காந்தி, சரவணன் ஆகியோர் ஆஜராகி, “மதுரை வண்டியூர், பனையூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட கண்மாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற, கண்மாய்களின் மூல ஆவணங்களை அதிகாரிகளிடம் இருந்து பெறுவதில் தாமதமாகிறது. பனையூர், கிருதுமால் நதி உள்ளிட்டவை ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதுடன், கால்வாய்களில் கழிவுநீர் கலந்து மாசு ஏற்படுத்துகிறது“ என்றனர்.

விரைவில் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கப்படும் என்றும், பனையூர் கால்வாயில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுவிட்டன என்றும், அதில் கழிவுநீர் கலப்பது விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து கால்வாய்களை சுத்தப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாரியம்மன் தெப்பக்குளத்தில் போதுமான தண்ணீர் நிரப்பவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றியது, நீர்நிலைகள் தூர்வாரப்பட்டது தொடர்பாக அந்த மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் ஆஜராகி விளக்கம் அளித்து, அறிக்கை தாக்கல் செய்தார். பின்னர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மொத்த கண்மாய்கள் எத்தனை, அவற்றில் எத்தனை கண்மாய்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன, எவ்வளவு கண்மாய்களில் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது என்று அடுத்த விசாரணையின்போது விரிவான தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story