கேரள வனப்பகுதியில்: ரெயிலில் அடிபட்டு காட்டு யானை பலி - தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்


கேரள வனப்பகுதியில்: ரெயிலில் அடிபட்டு காட்டு யானை பலி - தண்டவாளத்தை கடக்க முயன்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 1 Dec 2018 4:00 AM IST (Updated: 1 Dec 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

கேரள வனப்பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற காட்டு யானை ஒன்று ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது.

போத்தனூர், 

தமிழக- கேரள எல்லையான வாளையாரில் உள்ள ரெயில் பாதையில் காட்டு யானைகள் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதற்கு ரெயில் தண்டவாளம் செல்லும் சில இடங்கள் மேடாகவும், சில இடங்கள் பள்ளமாகவும் இருந்தது தான் காரணமாக கூறப்பட்டது. மேலும் இரவு நேரங்களில் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ரெயிலில் அடிபட்டு இறந்து விடுகின்றன.

இதை தவிர்ப்பதற்காக தமிழக எல்லையில் தண்டவாளத்தின் பக்கவாட்டில் உள்ள மேடான பகுதிகள் சமன் செய்யப்பட்டன. தண்டவாளம் இருக்கும் இடங்களில் மேடான பகுதியில் சரிவான பாதையை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இதன் மூலம் காட்டு யானைகள் எளிதில் தண்டவாளத்தை கடந்து சென்று விடும். இரவில் வனப்பகுதியில் ரெயில்களை மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில்தான் இயக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு தமிழக வனப்பகுதியில் ரெயிலில் அடிபட்டு யானைகள் பலியாவது குறைந்தது.

இந்த நிலையில் மங்களூருவில் இருந்து சென்னை செல்லும் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலையில் பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக-கேரள எல்லையான வாளையார் அருகே கேரள வனப்பகுதியான கஞ்சிகோடு என்ற இடத்தில் தண்டவாளத்தில் நின்றிருந்த காட்டு யானை மீது ரெயில் மோதியது.

இதில் அந்த காட்டு யானை தூக்கி வீசப்பட்டு தண்டவாளத்தையொட்டி உள்ள பகுதியில் விழுந்தது. யானை மீது மோதியது தெரியாததால் டிரைவர் ரெயிலை நிறுத்தாமல் சென்று விட்டார். காலையில் அந்த பகுதி வழியாக சென்றவர்கள் காட்டு யானை இறந்து கிடக்கும் தகவலை பாலக்காடு வனத் துறையினருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் அவர் கள் விரைந்து வந்து யானையின் உடலை கைப்பற்றினர். இதுபற்றி பாலக்காடு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உயிரிழந்த ஆண் யானைக்கு 25 வயது இருக்கலாம். அதற்கு உடற்கூராய்வு நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இரவில் காட்டு யானை தண்டவாளத்தை கடக்க முயன்ற இடம் மேடாக இருந்துள்ளது. 2 பக்கமும் பள்ளமாக இருந்ததால் தண்டவாளத்தில் இருந்து உடனடியாக யானையால் இறங்க முடியவில்லை. இதனால் ரெயிலில் அடிபட்டு யானை இறந்திருக்கலாம் என்றனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம்- கேரள ரெயில் வழித்தடத்தில் பாலக்காடு வனப்பகுதிகளில் தொடர்ச்சியாக ரெயில்களில் அடிபட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. இதைத்தொடர்ந்து ரெயில்களை இயக்கும் வேகத்தை குறைக்க ரெயில்வே துறை உத்தரவிட்டது.

இருப்பினும் தொடர்ந்து அதிவேகமாக ரெயில்கள் இயக்கப்படுவதே இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என்றும், இதை தடுக்க வேண்டும் என்றும் வன ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story