ஜனவரி 1-ந்தேதி முதல்: பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம்
ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கோவை,
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி வீசப்படும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், வைத்திருக்கவும், உற்பத்தி செய்யவும் வருகிற ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் தடைவிதித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து தொழில்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களான துணிப்பை மற்றும் காகித பைகளின் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் ஜனவரி 1-ந் தேதி முதல் தங்கள் வளாக பகுதிகளை பிளாஸ்டிக் இல்லாத பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தொழிற்சாலை வளாகங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் இல்லாத பகுதி என ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஓட்டல்கள், கேன்டீன்கள், அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பயன்பாடு இருக்க கூடாது என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவன பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாததை கண்காணித்து உறுதி செய்வதற்காக ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர். இந்த கமிட்டி யினர் அலுவலகத்தை தாண்டி பொதுமக்கள் மத்தியிலும் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை சரியாக செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு சார்பில் பசுமை விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதற்காக மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படுகிறது. மாநகராட்சியுடன் அன்னை வேளாங்கண்ணி மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இணைந்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் மற்றும் வில்லைகளை பொதுமக்களிடம் வினியோகிக்கும் பணிகளை மாநகராட்சி தனி அதிகாரி விஜயகார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
சவுரிபாளையம், உடையாம்பாளையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், புலியகுளம், சிங்காநல்லூர், பீளமேடு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்தும் வணிக நிறுவனங்களுக்கு சென்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு துண்டறிக்கைகள் மற்றும் வில்லைகளை வினியோகிக்கும் பணிகளில் மாணவ- மாணவிகள் ஈடுபட உள்ளார்கள். இதற்கு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மாநகராட்சி தனி அதிகாரி கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து பிளாஸ்டிக் தடை உத்தரவை அமல்படுத்துவதில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
Related Tags :
Next Story