மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் ஐ.டி. ஊழியரை தாக்கி, மோட்டார் சைக்கிள் எரிப்பு 2 பேருக்கு வலைவீச்சு + "||" + In the middle of the road IT Attacking the servant, Motorcycle combustion 2 people breaking down

நடுரோட்டில் ஐ.டி. ஊழியரை தாக்கி, மோட்டார் சைக்கிள் எரிப்பு 2 பேருக்கு வலைவீச்சு

நடுரோட்டில் ஐ.டி. ஊழியரை தாக்கி, மோட்டார் சைக்கிள் எரிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
ஐ.டி. ஊழியரை தாக்கி நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை எரித்ததாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
மும்பை,

மும்பை தாதா் பகுதியை சேர்ந்தவர் ராகுல் கோங்கர்(வயது25). இவர், அந்தேரியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அந்தேரி- குர்லா சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது லேசாக மோதியது. இருப்பினும் ராகுல் கோங்கர் இதை கண்டுகொள்ளவில்லை. ஆனால் காரில் இருந்து இறங்கிய 2 பேர் திடீரென அவரை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

இதனால் பயந்துபோன அவர் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் நடந்த சிறிது நேரத்தில், அந்தேரி போலீசாருக்கு அந்தேரி- குர்லா சாலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்த நிலையில் இருந்ததால் மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் விவரத்தை சேகரிக்க முடியவில்லை.

இந்தநிலையில், ராகுல் கோங்கர் தனது மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக அங்கு வந்தார்.

அப்போது, மோட்டார் சைக்கிள் காணாமல் போகி இருந்ததை பாா்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் 2 நாட்கள் கழித்து அவர் போலீசில், தனது மோட்டார் சைக்கிள் காணாமல் போனது தொடர்பாகவும், சம்பவத்தன்று 2 பேரால் தான் தாக்கப்பட்டது பற்றியும் தெரிவித்தார். போலீசார் அதே இடத்தில் மோட்டார் சைக்கிள் தீ பிடித்து எரிந்த நிலையில் மீட்கப்பட்டதை கூறினார்கள். அப்போது தான் அந்த மோட்டார் சைக்கிள் ராகுல் கோங்கருடையது என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் சண்டையிட்ட இருவரும் தான் அந்த மோட்டார் சைக்கிளை எரித்து இருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். அந்த ஆசாமிகள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.