கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து நிவாரணப்பொருட்கள்க அனுப்பி வைக்கப்பட்டன.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி ஊரட்சிக்குட்பட்ட அ.காளாப்பூர் கிராமத்தினர் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது. அதில் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலைகள், போர்வைகள், பாய், அரிசி, பருப்பு உள்ளிட்ட பலவகை பொருட்கள் லாரி மூலம் ஊர் தலைவர் பார்த்திபன் அம்பலம் தலைமையில் அனுப்பி வைக்கப்பட்டது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.ம.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்க அந்த கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் உத்தரவின் பேரில் அந்த கட்சியினர் நிவாரண பொருட்கள் திரட்டி அனுப்பி வருகின்றனர். அதன்படி மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை துணை பொது செயலாளர் தினகரனிடம் வழங்கினர்.
காரைக்குடி ஐக்கிய ஜமாத் மற்றும் அனைத்து ஜமாத்துகள் நகர இஸ்லாமிய வியாபாரிகள் சங்கத்தினர், இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், ஆடைகள் போர்வைகள் அனுப்பிவைக்கப்பட்டு, அவற்றை நேரில் சென்று கொடுக்கப்பட்டது. ஏற்பாடுகளை நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் ராஜமுகம்மது, பொருளாளர் ஷாஜகான், இந்திய தவுகித் ஜமாத் மாநில செயலாளர் ரஸ்தா செல்வம் உள்பட ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
எஸ்.புதூர் ஒன்றியம் கஜா புயலால் அதிக அளவில் சேதமடைந்தது. அதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு இந்த ஒன்றியம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்தநிலையில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் எஸ்.புதூர் ஒன்றியம் வலசைபட்டி ஊராட்சியில் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 500–க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ சிகிச்சை பெற்றனர். இதில் பொது மருத்துவம் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எடை, உயரம், இ.சி.ஜி. ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.