நர்சு வேலை வாங்கி தருவதாக மோசடி: கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி - முன்னாள் நீதிபதி உள்பட 2 பேர் மீது புகார்
நர்சு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த முன்னாள் நீதிபதி உள்பட 2 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. அப்போது, விவசாயிகள் பலர் அங்கு கூடியதால் அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்திக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் அருகே வந்த ஒரு பெண் தான் வைத்திருந்த பையில் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை எடுத்து, தன் மீது ஊற்ற முயன்றார்.
இதனை பார்த்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த பாட்டிலை தட்டிவிட்டனர். பின்னர் அந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த அருண்குமார் என்பவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 28) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த பெண் போலீசிடம் கூறியதாவது:-
என்னுடைய சொந்த ஊர் திண்டுக்கல் அருகே உள்ள தருமத்துப்பட்டி. நான் நர்சிங் படித்துள்ளேன். என்னுடைய கணவர், மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த 2 பேர், என்னிடம் அரசு மருத்துவமனையில் நர்சு வேலை வாங்கி தருவதாக கூறினர்.
அதில் ஒருவர் இதற்கு முன்பு ஊர்க்காவல்படையில் பணியாற்றியவர். மற்றொருவர் நுகர்வோர் கோர்ட்டில் நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்கள் வேலை வாங்கி தருவதற்காக ரூ.3 லட்சம் கேட்டனர். இதற்காக நான் 3 தவணைகளில் ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அவர்களிடம் கொடுத்தேன். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், மோசடி செய்துவிட்டனர். இதனால் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி, குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலுவிடம் தனது மனுவை கொடுத்தார். அதை வாங்கிய அவர், ‘மனு மீது உரிய விசாரணை நடத்த போலீசாரிடம் தெரிவிக்கப்படும். இருப்பினும் இதுபோல் தீக்குளிக்க முயற்சிக்கக்கூடாது’ என்று ராஜேஸ்வரியிடம் தெரிவித்தார்.
Related Tags :
Next Story