திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்


திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 312 மனுக்கள்
x
தினத்தந்தி 5 Dec 2018 4:15 AM IST (Updated: 5 Dec 2018 12:43 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்,

இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் ரேஷன்கார்டு, கடனுதவி, வேலைவாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோருக்கு உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 312 மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுகொண்ட கலெக்டர் அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

பின்னர் அவர் திருத்தணி வட்டம் சின்னம்மாப்பேட்டை கிராமத்தில் சாலை விபத்தில் காயம் அடைந்த பரமேஸ்வரி என்பவருக்கும், பள்ளிப்பட்டு வட்டம் குமார ராஜபேட்டை கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் வாரிசுதாரருக்கும் தமிழக முதல்-அமைச்சரின் சாலை விபத்து நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.50 ஆயிரத்திற்கான காசோலைகளையும், கும்மிடிப்பூண்டி வட்டம் ராஜபாளையம் கிராமத்தில் மின்னல் தாக்கி உயிரிழந்த மகேஸ்வரி என்பவரது வாரிசுதாரருக்கு ரூ.4 லட்சத்திற்கான இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதிக்கான ஆணையையும், வேளாண்மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு மண் வள அடையாள அட்டையையும், பொன்னேரி வட்டத்தை சேர்ந்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 மாதாந்திர ஓய்வூதியத்திற்கான ஆணைகளை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story