ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நள்ளிரவில் பயங்கரம்; வீடு புகுந்து விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 5 Dec 2018 4:30 AM IST (Updated: 5 Dec 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீடு புகுந்து விவசாயியை 3 பேர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள அச்சம்தவிர்த்தான் கிராமத்தை சேர்ந்த வேலு என்பவருடைய மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வந்தார். அவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஈஸ்வரன். இரு குடும்பத்திற்கும் பிரச்சினைகள் ஏற்பட்டு தகராறு இருந்து வந்துள்ளது.

சுந்தரமூர்த்தியிடம் கவுதம் என்பவர் வேலை செய்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. அப்போது கவுதமிடம் ஈஸ்வரன் உள்ளிட்ட சிலர் சுந்தரமூர்த்தி சொன்னால்தான் எதுவும் கேட்பாயா என்று கூறி தகராறு செய்துள்ளார்கள். இதனால் பிரச்சினை வலுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த நேற்று முன்தினம் இரவு கவுதம், ஈஸ்வரன், எழிலன் என்கிற தங்கப்பாண்டி, சக்கரைராஜ் ஆகியோர் மது குடித்துள்ளார்கள். மது போதையில் சுந்தரமூர்த்தி குறித்து பேசி, கவுதமிடம் மீண்டும் தகராறு செய்ததோடு அவரை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து கவுதம், சுந்தரமூர்த்தியிடம் முறையிட்டுள்ளார். அவர், இதுகுறித்து போலீசில் புகார் செய்வோம் என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் ஈஸ்வரனுக்கு எட்டியுள்ளது. இதனால் மேலும் அவர் ஆத்திரம் அடைந்தார். நள்ளிரவில் ஈஸ்வரன், எழிலன், சக்கரைராஜ் ஆகிய 3 பேரும் சுந்தரமூர்த்தியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

வீட்டில் சுந்தரமூர்த்தி தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கதவை சாத்தி வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டினுள் புகுந்து அரிவாளால் சுந்தரமூர்த்தியை சரமாரியாக வெட்டி கொலை செய்ததாக தெரியவருகிறது. இந்த சத்தம் கேட்டு மனைவி மற்றும் குழந்தைகள் எழுந்த நிலையில் சுந்தரமூர்த்தி ரத்த வெள்ளத்தில் பிணமானார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 3 பேரும் அங்கிருந்து ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வன்னியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரமூர்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டனர். இந்த நிலையில் மருத்துவமனை முன்பு சுந்தரமூர்த்தியின் உறவினர்கள் திரண்டனர். கொலையில் தொடர்புடையவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர்.

இதனைதொடர்ந்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் சக்கரைராஜ், சிவகாசி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள எழிலனை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story