முட்டை உடைவை குறைக்க கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 சேர்க்க வேண்டும் பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


முட்டை உடைவை குறைக்க கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 சேர்க்க வேண்டும் பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Dec 2018 10:30 PM GMT (Updated: 7 Dec 2018 7:43 PM GMT)

முட்டை உடைவை குறைக்க கோழித்தீவனத்தில் வைட்டமின் டி-3 சிறிய அளவில் சேர்க்கவேண்டும் என பண்ணையாளர்களுக்கு ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இன்று முதல் 4 நாட்களுக்கு வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. முதல் 3 நாட்களில் காற்று 6 கி.மீட்டர் வேகத்தில், தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். 11-ந் தேதி காற்று 4 கி.மீட்டர் வேகத்தில், தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.

வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 85, 80, 75, 75 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 55, 50, 50, 50 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 4 நாட்களுக்கான நாமக்கல் மாவட்ட வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடனும், மழையற்றும் காணப்படும். பகல் வெப்பம் 89.6 டிகிரியாகவும், இரவில் குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் நிலவி, கோழிகளில் தீவன எடுப்பு உயர்ந்து காணப்படும். பகல் வெளிச்சம் குறைந்து வரும் நிலையில், முட்டை உடைவை குறைக்க, வைட்டமின் டி-3 தீவனத்தில் சிறிய அளவாக சேர்த்து வர வேண்டும்.

கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் மேல்மூச்சு குழாய் அயற்சி நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளது தெரிய வந்துள்ளது. எனவே பண்ணையாளர்கள் அதற்கு தகுந்தாற்போல் உயிர் பாதுகாப்பு முறைகளை கையாள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story