நோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக புகார்: ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நோயாளிகளை அனுமதிக்க பணம் வசூலிப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரி ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி ஆகிய 2 தாலுகாக்களின் தலைமை மருத்துவமனையாக உள்ளது. அதனால் தினமும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
மேலும் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவும் செயல்பட்டு வருகிறது. இங்கு விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றும் அடிதடி பிரச்சினைகளில் காயம் அடைந்தவர்கள், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். அவ்வாறு வரும் நோயாளிகளிடம், உள்நோயாளியாக அனுமதிக்கவும், அடிதடி பிரச்சினைகளில் இருதரப்பினரிடம் பஞ்சாயத்து பேசி பணம் பறிப்பதாகவும், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சந்திரமவுலி, இன்ஸ்பெக்டர்கள் தங்கமணி, பூபதிராஜன், கோமதி, தாசில்தார் சாந்தி உள்பட மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர்கள், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் அதிரடி சோதனை நடத்தினர். 3 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து டாக்டர்கள், நோயாளிகள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஒரு டாக்டர், 5 புரோக்கர்களை வைத்துகொண்டு அடிதடி பிரச்சினையில் காயம் அடைந்தவர்கள், விபத்தில் காயம் அடைந்தவர்கள் என சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் பணம் வசூல் செய்தது, கட்ட பஞ்சாயத்து செய்ததும், அரசு ஆஸ்பத்திரியில் இருந்து மருந்து, மாத்திரைகளை எடுத்து சென்று, அருகில் தனது கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு வழங்கியதும் தெரியவந்தது. மேலும், மருத்துவமனை பராமரிப்பு செலவுக்காக அரசு வழங்கும் நிதி முறையாக செலவு செய்யப்படுகிறதா?, அவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதா? என ஆவணங்களை ஆய்வு செய்தனர். முதல்-அமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் ஏதாவது முறைகேடுகள் நடந்து உள்ளதா? என்பது குறித்தும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினர்.
மேலும் ஒரு செவிலியர் தனது வீட்டு வேலைக்கு மருத்துவமனை ஊழியர்களை பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. எனவே அந்த செவிலியர் மீதும், புரோக்கர்களை வைத்து கட்ட பஞ்சாயத்து செய்யும் டாக்டர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நோயாளிகள் பலரும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் இந்த அதிரடி சோதனை நேற்று ஓமலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story