பொன்னமராவதி அருகே செல்போனுக்கு பதிலாக பார்சலில் சாமி சிலைகள் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி
பொன்னமராவதி அருகே செல்போனுக்கு பதிலாக பார்சலில் சாமி சிலைகள் வந்ததால் வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அண்ணா சாலை மறவாமதுரை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 25). மெக்கானிக்கான இவர் அதே பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார். இவருடைய செல்போனுக்கு சமீபத்தில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசிய ஒரு பெண், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். மேலும் ‘உங்கள் செல்போன் எண்ணுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது. நீங்கள் வைத்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஒரு செல்போன் பரிசாக சலுகை விலையில் பெற தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளர்கள். நீங்கள் ரூ.7 ஆயிரம் மதிப்பிலான செல்போனை சலுகை விலையில் ரூ.1,500 மட்டுமே செலுத்தி பெற்று கொள்ளலாம்’ என்று கூறினார். இதை நம்பிய ரமேஷ், செல்போனை ரூ.1,500 செலுத்தி பெற்றுக்கொள்வதாக கூறினார்.
இதையடுத்து அந்த தனியார் நிறுவனம் அனுப்பி வைத்த பார்சல், நேற்று கூரியர் மூலம் ரமேஷ் முகவரிக்கு வந்தது. ரமேஷ், புதிய செல்போன் வந்து விட்டது என்ற சந்தோஷத்தில் ரூ.1,500-ஐ கூரியர் ஊழியரிடம் செலுத்தி பார்சலை வாங்கினார். இதையடுத்து ரமேஷ் தனது நண்பர்கள் முன்னிலையில் பார்சலை பிரித்து பார்த்தார்.
அப்போது பார்சலில் செல்போனுக்கு பதிலாக சரஸ்வதி, திருப்பதி வெங்கடாசலபதி, விநாயகர், ஆமை போன்ற மிகச்சிறிய சிலைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ், இது குறித்து பொன்னமராவதி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story