காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணையில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி


காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணையில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கலாம் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2018 10:15 PM GMT (Updated: 7 Dec 2018 9:21 PM GMT)

காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் புதிய கதவணையில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கலாம் என முதற்கட்ட ஆய்வுக்கு பின் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

நொய்யல்,

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், புஞ்சைபுகளூர் பகுதியில் காவிரியாற்றின் குறுக்கே ரூ.490 கோடி மதிப்பில் கதவணை அமைக்கும் பணிக்கான முதற்கட்ட ஆய்வு நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: -

கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்-அமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் புஞ்சைபுகளூர் பகுதி காவிரியாற்றின் குறுக்கே சுமார் ரூ.490 கோடி மதிப்பில் கதவணை அமைக்கப்படவுள்ளது. ஆற்றின் குறுக்கே 1,140 மீட்டர் நீளத்திற்கு இந்தக்கதவணை அமைக்கப்படவுள்ளது. இதில் 12 மீ நீளமும், 2.5 மீ உயரமும் கதவுகள் அமைக்கப்படவுள்ளது. இப் பணிகள் முடிவுற்ற பின் கதவணையின் மூலம் சுமார் 1 டி.எம்்.சி. தண்ணீர் தேக்கி வைக்கப்பட உள்ளது.

ஆற்றின் மட்டம் தாழ்ந்து போனதால் கரூர் மாவட்டத்தில் வாங்கல் வாய்க்காலிலும், நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர் வாய்க்காலிலும் நீண்ட வருடம் தண்ணீர் செல்லாமல் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வந்தது. இந்த கதவணை அமைக்கும் பணிகள் முடிவுற்ற பின் இவ்விரு வாய்க்கால்களுக்கும் தண்ணீர் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதன் காரணமாக 2 மாவட்டங்களிலும் சுமார் 10,000 ஏக்கர் விளைநிலங்கள் பயனடைவதுடன் கரூர் நகராட்சி, நாமக்கல் மாவட்டத்திற்கான குடிநீர் ஆதாரமும் மேம்பாடு அடையும். அத்துடன் இப் பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் போன்றவற்றின் நிலத்தடிநீர் மட்டம் உயரும். கரூர் மாவட்டத்தில், காவிரி, அமராவதி, குடகனாறு, நங்காஞ்சி போன்ற ஆறுகளில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தடுப்பணைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பொதுப் பணித்துறை கண்காணிப்புபொறியாளர் ஷாஜன், உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன், மாவட்ட அவைத் தலைவர் காளியப்பன், கரூர் ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன், புன்செய் புகளூர் பேரூர் செயலாளர் சரவணன், காகிதபுரம் பேரூர் செயலாளர் சதாசிவம், வருவாய்த்துறை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story