நாகர்கோவிலில் 140 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா


நாகர்கோவிலில் 140 பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 2:50 PM GMT)

140 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நாகர்கோவிலில் நேற்று நடந்தது.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.

விழாவில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு நாகர்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டார் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள 140 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், குமரி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் 140 பள்ளிகளை சேர்ந்த 32 ஆயிரத்து 370 மாணவ–மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. இதில் 14 ஆயிரத்து 363 மாணவர்களுக்கும், 18 ஆயிரத்து 7 மாணவிகளுக்கும் சைக்கிள்கள் ரூ.18.77 கோடி மதிப்பில் வழங்கப்படுகிறது என்றார்.

கலெக்டர் பிரசாந்த் வடநேரே பேசுகையில், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எனவே மாணவ, மாணவிகள் இந்த அரிய திட்டத்தை பயன்படுத்தி கல்வியில் சாதனை படைக்க வேண்டும் என்றார்.

முன்னதாக, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி செந்திவேல் முருகன் வரவேற்று பேசினார். மாவட்ட பால்வள தலைவர் எஸ்.ஏ.அசோகன், அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் ஜாண்தங்கம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

இதில் பொழிக்கரை மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்துரு, சுகுமாரன், ராஜாராம், நாஞ்சில் சந்திரன், லதா சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story