திருக்கோவிலூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது


திருக்கோவிலூரில் தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 8 Dec 2018 10:45 PM GMT (Updated: 8 Dec 2018 5:43 PM GMT)

திருக்கோவிலூரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.


திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்துவது தொடர்பாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருக்கோவிலூரில் நடைபெற்றது. மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த இந்த கூட்டத்துக்கு கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கோவிலூர் கல்வி மாவட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

கூட்டத்தில் கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:-


விழுப்புரம் மாவட்டத்தை கல்வியில் முதன்மை மாவட்டமாக உருவாக்குவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். ஆசிரியர்களாகிய நீங்கள் உங்கள் கடமையை சரியாக செய்தாலே, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி அடைய செய்து, இம்மாவட்டத்தை கல்வியில் முன்னேற்றம் பெற்ற மாவட்டமாக உருவாக்க முடியும்.

கடந்த கல்வியாண்டில் மட்டும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில், விழுப்புரம் மாவட்டத்தில் 10-ம் வகுப்பில் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் 3,300 மாணவர்களும், 12-ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் 2,500 மாணவர்களும் தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர்களாகிய நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தினாலே அனைவரையும் தேர்ச்சி பெற வைக்கமுடியும்.

ஒவ்வொரு பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர், அனைத்து ஆசிரியர்களுக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சரியான நேரத்துக்கு ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பாடம் நடத்துவதை கண்காணிக்கவேண்டும். உங்கள் பள்ளி மாணவர்களுக்கு உரிய முறையில் பாடம் கற்பித்து, 100 சதவீதம் தேர்ச்சிபெற செய்து, நடப்பு கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்தை தேர்ச்சி சதவீதத்தில் முன்னிலைக்கு கொண்டுவரவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்தில் கடந்த 2017-18-ம் கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகளில் பல்வேறு பாடப்பிரிவுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுத்தந்த 253 ஆசிரியர்களுக்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ்களையும், சிறந்த பள்ளிகளுக்கு கேடயங்களையும் வழங்கினார்.

இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் சேவியர் சந்திரகுமார், கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா உள்பட திருக்கோவிலூர் கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story